இலங்கை விகாரத்தையடுத்து சர்வதேச நாடுகள் அறிவுறுத்தல்

கண்டி மற்றும் அம்பாறையில் ஏற்பட்டிருந்த இயல்பற்ற சூழ்நிலை குறித்து இலங்கைக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளது நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரது பேச்சாளர் ஸ்டெபன் டுஜாரிக் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,

“இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலைஅடைகிறது. எனினும், இவற்றை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பு வரவேற்கப்படுகிறது” என்றார்.

இதேவேளை, இலங்கையில் அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்ற தங்களது நாடுகளின் பிரஜைகளுக்கு பல நாடுகள் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளன.

இலங்கையில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா தமது பயணிகளுக்கு பயண அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது.
அதேநேரம், இலங்கையில் நடைபெறும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து

கொள்ள வேண்டாம் என்று, பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தமது நாட்டின் பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு நடைமுறைகளுடன் இணங்கி நடக்குமாறும் கோரியுள்ளது.

அதேநேரம் அவுஸ்திரேலியாவும் தமது நாட்டின் பிரஜைகளுக்கு இலங்கையில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என்பவற்றை தவிர்க்குமாறும், நாட்டு நடப்பு குறித்த உத்தியோகபூர்வ ஊடகத் தகவல்கள் மற்றும் அரச அறிவித்தல்களை பின்பற்றி நடக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் தற்போது இயல்பான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக, ஐக்கிய அரபு ராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் சுலைமான் ஜே மொஹிதீன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

கண்டி மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற சம்பங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவாது தடுப்பதற்காகவே அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டிருப்பினும், மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் எவையும் பாதிப்படையவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் விமான சேவை நிறுவனங்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]