இலங்கை மீது அமெரிக்கா அதிருப்தி

அமெரிக்கா

பொறுப்புக்கூறல், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் விடயத்தில், இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்க தூதுவர் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், இது தொடர்பாகவும், உலக உணவு நிறுவனம் இலங்கைக்கான உதவியை நிறுத்தியுள்ளமை தொடர்பாகவும், கலந்துரையாடுவதற்காக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பை சந்தித்திருந்தார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக, தகவல் வெளியிட்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

“எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்தும் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இது குறித்து நான் அவரிடம் வினவியிருந்தேன்.

எமக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்துமே இன்று பொய்த்துப் போயுள்ளன. ஆகவே அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என நான் தெரிவித்துள்ளேன்.

அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்களில் பின்வாங்குகின்றது. எமக்கு இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமெரிக்க தூதுவர் என்னிடம் தெரிவித்தார்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]