இலங்கை போக்குவரத்து சபையினர் போராட்டம்: மக்கள் அவதி

இலங்கை போக்குவரத்து சபையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தால் வடக்கு மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இப் போராட்டம் காரணமாக தூர இடங்களில் இருந்தும், கிராம பகுதிகளில் இருந்தும் மன்னார் நகருக்கு வந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் பாடசாலை மாணவர்கள், அரச, தனியார் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் பேரூந்துகள் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை போக்குவரத்து சபையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வடமாகாண ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார், வவுனியா மாவட்ட சாலை பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ‘அடிப்படை சம்பளத்தினை 27,500 ரூபாயாக உயர்த்து’, ‘மேலதிக சம்பளமான 10 ஆயிரம் ரூபாயை அடிப்படை சம்பளத்துடன் சேர்’, ‘கல்வித்தகமைக்கு முன்னுரிமை அளித்து பதவி உயர்வை வழங்கு’, ‘ஒப்பந்த அடிப்படை ஊழியர்களுக்கு நிரந்தர பதவியை வழங்கு’, ‘சாரதி மற்றும் காப்பாளரின் கைவிரல் அடையாள பதிவினை இரத்துச்செய்’, ‘உயர்ந்த போக்குவரத்து தண்டத்தை இரத்துச் செய்’ உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இப்பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]