இலங்கை – பங்களாதேஷ் அரச தலைவர்கள் சந்திப்பு -12 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

நட்பு நாடுகளாக செயற்பட்டுவரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே காணப்படும் இருதரப்பு தொடர்புகளை பலமான அத்திவாரத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இரு நாட்டு அரச தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர்.

பங்களாதேஷிற்கு மூன்று நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையார் ஆகியோருக்கிடையே இன்று (14) முற்பகல் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின்போதே அரச தலைவர்கள் இவ்வாறு உறுதிபூண்டுள்ளனர்.
பங்களாதேஷ் பிரதமர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையார் அன்புடன் வரவேற்றார்.

அரச தலைவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.

பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கிடையில் வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துதல் மற்றும் விசேட பொருளாதார வலயத்தை ஏற்படுத்தல் தொடர்பாக இதன்போது அரச தலைவர்கள் விசேட கவனம் செலுத்தினர்.

விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையின் அனுபவங்களை இரு நாடுகளுக்கிடையே பரிமாறிக்கொள்வதற்கான புதிய செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தல் போன்றவற்றில் இணைந்து செயற்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இலங்கையின் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பங்களாதேஷின் தொழில்நுட்ப அறிவினை பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தமது நாட்டில் விஜயம் மேற்கொண்டுள்ளமை தொடர்பாகவும், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பாகவும் பங்களாதேஷ் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நாடுகளுக்கிடையே காணப்படும் தொடர்புகளை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமென வலியுறுத்திய பங்களாதேஷ் பிரதமர், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பிராந்திய ரீதியிலும் இலங்கையுடன் தொடர்ச்சியாக ஒத்துழைப்புடன் செயற்பட பங்களாதேஷ் தயாராக உள்ளதெனவும் தெரிவித்தார்.

இலங்கையும் பங்களாதேசும் ஒரே மாதிரியான பிரச்சினைகளையே எதிர்கொண்டுள்ளதென்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத குடியேற்றவாசிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஒன்றிணைந்து செயற்படுவதற்குள்ள வாய்ப்பையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

பங்களாதேஷ் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் காணப்படும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதிகளவு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்புவிடுத்ததுடன், அவர்களுக்கான சகல வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதென்றும் குறிப்பிட்டார்.

வெகுவிரைவில் இலங்கைக்கு வருகைதருமாறு பங்களாதேஷ் பிரதமருக்கு ஜனாதிபதி அழைப்புவிடுத்தார், அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட பங்களாதேஷ் பிரதமர், இரு நாடுகளுக்கிடையே புதிதாக ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகளை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு அந்த சந்திப்பு முக்கியமானதாக அமையுமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அதன் பின்னர் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 12 புதிய ஒப்பந்தங்கள் அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

முதலாவது ஒப்பந்தம் இரு நாடுகளின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கிடையே தரக் கட்டுப்பாடு தொடர்பாக கைச்சாத்திடப்பட்டதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அந்நாட்டின் கைத்தொழில்துறை அமைச்சர் ஆகியோர் அதில் கைச்சாத்திட்டனர்.

இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அந்நாட்டின் வர்த்தக அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.
விவசாய ஒத்துழைப்புக்கள் பற்றிய ஒப்பந்தத்தில் விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார மற்றும் அந்நாட்டின் விவசாய அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

பிரதியமைச்சர் லசந்த அலகியவண்ண மற்றும் அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சர் ஆகியோர் தகவல் தொழில்நுட்பம் பற்றிய உடன்படிக்கையிலும், வானொலி மற்றும் தொலைக்காட்சி அபிவிருத்தி பற்றிய ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டனர்.

பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மற்றும் பங்களாதேஷின் கப்பற்துறை அமைச்சர் ஆகியோர் கப்பற்துறை பற்றிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

வெளிநாட்டு சேவைகள் உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல் மற்றும் வெளிநாட்டு சேவைகள் பயிற்சி பிரிவொன்றினை நிறுவுதல் தொடர்பான இரு ஒப்பந்தங்களில் இரு நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

இரு நாடுகளின் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டுக்களுக்கு வீசா பெறுவதனை விலக்களித்தல் பற்றிய ஒப்பந்தத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணானாயக்கவும் பங்களாதேஷின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.

அத்துடன் இரு நாடுகளுக்கிடையே ஆடைக் கைத்தொழில்துறை தொடர்பான உடன்படிக்கையும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் பற்றிய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]