இலங்கை தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை தொடர்வதாக தகவல்

இலங்கை தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை தொடர்வதாக தகவல்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், தமிழர்கள் தாக்கி சித்திரவதை செய்யப்படுவதும், வல்லுறவுக்குட்படுத்தப்படுவதும் தொடர்வதாக, செய்திகள் வௌியாகியுள்ளன.

ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள 50க்கும் மேற்பட்ட ஆண்கள், தற்போதுள்ள அரசாங்கத்தின் கீழும், தாம் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம், தாக்குதல் உள்ளிட்ட சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக, அசோசியேட்டட் பிரஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு கூறியுள்ளனர்.

மேலும்,  அவர்களின் மார்பு, இடுப்பு, கால்களின் வடுக்களும் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அசோசியேட்டட் பிரஸ், 32 மருத்துவ மற்றும் உளவியல் மதிப்பீடுகளை ஆய்வு செய்ததுடன், 20 பேரை நேர்காணல் செய்தது.

உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த நிலையில், போராளிக் குழுவை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தம்மீது குற்றம்சாட்டப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் போர் முடிவுக்கு வந்த போதிலும், 2016ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து, இந்த ஆண்டின் ஜூலை வரை சித்திரவதைகள் தொடர்வதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடந்த 40 ஆண்டுகளாக உலகின் மோசமான நாடுகளில் சித்திரவதைகளில் இருந்து தப்பி வந்தவர்களை நேர்காணல் செய்த பியர்ஸ் பிகோ என்ற தென்னாபிரிக்க மனித உரிமைகள் விசாரணையாளர், தாம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிராத மிருகத்தனமான சித்திரவதைகள் இங்கு இடம்பெற்றிருப்பதாக கூறுகிறார்.

பெரும்பாலான ஆண்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில், தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினர்.

தம்மை சிறைபிடித்தவர்கள் பெரும்பாலானோர் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

சிலர், தம்மைக் கைது செய்து விசாரித்தவர்கள் படையினர் என்று, அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் மற்றும் முத்திரைப் பட்டிகளின் அடிப்படையில் கூறுகின்றனர்.

எனினும், கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

இதில், இராணுவம் தொடர்புபடவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்த வரையில், பொலிஸாரும் தொடர்புபடவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும், இப்போது அதனைச் செய்வதற்கு எமக்கு எந்தக் காரணமும் இல்லை, என்று குறிப்பிட்டார்.

இலங்கையில், பரந்தளவிலான சித்திரவதைகள் இன்னமும் பாதுகாப்புப் படைகளால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டாலும், 26 ஆண்டுகால உள்நாட்டு போரில், வெளிவந்த போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதில் இலங்கை தோல்வியடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]