தேயிலை உற்பத்தி

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திகளின் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின், விவசாய மற்றும் விலக்குகள் கண்காணிப்பு அமைப்பான, Rosselkhoznadzor இன் தலைவர், சேர்ஜி டாங்க்வேர்ட் இதனை கூறியுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் மீதான தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் நாளிதழுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“இலங்கையில் இருந்து அனைத்து விவசாய உற்பத்திகளையும் இறக்குமதி செய்வதற்கு கடந்த 18ஆம் நாளில் இருந்து Rosselkhoznadzor தடை விதித்திருந்தது. தேயிலைப் பொதியில், தானியங்கள் மற்றும் விதைகளுக்கு ஆபத்தான பூச்சியினமான கப்ரா என்ற வண்டு, கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே, இந்த தடை விதிக்கப்பட்டது.

இந்தப் பூச்சி ரஷ்யாவுக்குள் நுழைந்தால், பாரிய இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை, எதிர்வரும் 30ஆம் திகதியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்.

எனினும், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்லா தாவர உற்பத்திகளின் மீதான கண்காணிப்பும் அதிகரிக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]