இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் முடக்கம்

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உலக இலங்கை பேரவை இதனை இன்று தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களால் உயர்ஸ்தானிகராலய இணையத்தளம் முடக்கப்பட்டதாக தாம் சந்தேகிப்பதாக பிரித்தானியாவில் உள்ள உலக இலங்கை பேரவையின் தலைவர் இந்திக குணவர்தன தெரிவித்துள்ளார்.

இணையத்தள முடக்கம் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடமும், இலங்கையிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தாம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, தமது கழுத்தை காண்பித்து, அவர்களுக்கு சைகையொன்றின் மூலம் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பிரிகேடியர் ப்ரியங்க பெர்னாண்டோ, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின்பேரில் அவர் மீண்டும் பணியில் இணைக்கப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு, குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டதாக தாம் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.