இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவோம் : சீனா உறுதி

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இலங்கையை சிங்கப்பூராக தரமுயர்த்துவதற்கு ஏற்ற வகையில், சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நேற்று நடந்த- சீனாவின் கொடையில், ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை கருவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சீன தூதுவர்,இவ்வாறு குறிப்பிட்டார்.

“சீனாவின் மிகச் சிறப்பான நண்பன் தான் இலங்கை. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்பு 70 ஆண்டுகளாக தொடர்கிறது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்குக் காரணமான இறப்பர்- அரிசி உடன்பாட்டை, சீன, சிறிலங்கா மக்கள் நன்றாக அறிந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது அனைத்துலக உதவியில் அதிகளவு பங்கை இலங்கைக்கு வழங்கி வருகிறது. இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் சீனாவுக்கு பொறுப்பு உள்ளது.

இலங்கையர்களுக்கு அபிவிருத்தி முக்கியம். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

தென்பகுதியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க சிறிலங்காவுக்கு சீனா உதவும். இளைஞர்களின் தொழில்நுட்ப ஆற்றலை வலுப்படுத்தவும், மீன்பிடி மற்றும் ஏனைய துறைகளில், தொழில்நுட்ப வசதிகளை பெருக்கவும் இது உதவும்.

சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் மூலம், 1300 இலங்கை மாணவர்களுக்கு சீனா புலமைப்பரிசில் வாய்ப்புகளை வழங்குகளிது. இது எதிர்காலத்தில் 2000 ஆக அதிகரிக்கப்படும்.

தென்பகுதியில் உள்ள மீனவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டத்தை ஆரம்பிக்கவும் நாங்கள் இணங்கியுள்ளோம்.

சீனாவின் ஷங்காய் நகரத்தைப் போன்று, தென்பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு, சீனா தொடர்ந்து உதவிகளைச் செய்யும்.

அடுத்த 15 ஆண்டுகளில் இலங்கையை சிங்கப்பூரின் நிலைக்கு தரமுயர்த்துவதற்காக சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]