இலங்கையில் வறட்சியால் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

இலங்கையில் வறட்சியால் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
இலங்கையில் வறட்சியான கால நிலை காரணமாக ஆறு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அனர்த்த முகாமைத்துவ மையம் கூறுகின்றது.

வடக்கு , கிழக்கு மற்றும் மலையகம் உட்பட நாடு தழுவியதாக ஒரு லட்சத்து 13 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 6 லட்சத்து 5 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மையம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி மட்டக்களப்பு மாவட்டத்திலே பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகம் என தெரியவருகின்றது..

இம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் தேவையான குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் இயக்குநரான பிரதீப் கொடிப்புலி கூறுகின்றார்.

பருவ மழை வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள வறட்சியால் நீர் நிலைகளிலும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்டம் 23 – 27 சத வீதமாக குறைந்து காணப்படுவதாக நீர்ப்பாசன இலாகா கூறும் அதே வேளை குழாய் நீர் விநியோகம் எந் நேரத்திலும் மட்டுப்படுத்தப்படலாம் என தேசிய நீர் வழங்கல் வாரியம் தெரிவிக்கின்றது.

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வாரியம் குழாய் நீர் பாவனையாளர்களை கேட்டுள்ளது.

ஐ. நா மற்றும் அதன் துணை அமைப்புகள் உதவி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வறட்சியை எதிர்கொள்வதற்கும் நிவாரண உதவிகள் தொடர்பாகவும் ஐ. நா மற்றும் அதன் துணை நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளரும் , ஐ.நா அபிவிருத்தி திட்ட வதிவிட பிரதிநிதியும் உலக உணவு திட்ட பிரதிநிதியுமான பிரெண்டா பார்ட்டன் மற்றும் உலக உணவுத் திட்ட நிறைவேற்று இயக்குநரான ஏர்த்தரின் கசின் ஆகியோருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் இது தொடர்பான சந்திப்பொன்றும் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது முதற்கட்டமாக வறட்சி தொடர்பான பேச்சுவார்த்தை, மதிப்பீடு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளுக்கான நிபுணர்களை அனுப்புவது போன்ற உதவிகளை வழங்க ஐ.நா பிரதிநிதிகள் முன் வந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறுகின்றது.

 600 000 burdened

வறட்சி காரணமாக தொழில்களை இழந்துள்ள கிராமிய மக்களுக்கு தொழில்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உணவு அல்லது பணத்தை தமது அமைப்பு ஊடாக வழங்க முடியும் என உலக உணவுத் திட்ட பிரதிநிதி குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வறட்சி காரணமாக எழுந்துள்ள குடிநீர் பிரச்சனை நீண்ட கால சுகாதார பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் வவுசர்கள் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிபிசி தமிழ்