இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்ய சட்டம் நிறைவேற்றப்படுமா?

முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும்.  விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக்கலாம். என தேசிய காங்கிரஸின் தேசிய பிரதி கொள்கை பரப்பு செயலாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் கல்முனை பிரதேச செயலகத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் முற்றாக போதைப்பொருள் பாவனையை முடிவுக்கு கொண்டுவரும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.

கடந்த ஆட்சியில் புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து சுதந்திரமான நாட்டை கட்டியெழுப்பிய பெருமைக்கு மஹிந்த அரசாங்கம் காரணமாக இருந்ததைப்போன்று எதிர்காலத்தில் போதைப்பொருள் அற்ற நாடாக இலங்கை சர்வதேசத்தில் தலைநிமிர்ந்து நிற்பதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். இதனால் விரைவில் இலங்கை போதைப் பொருள் அற்ற நாடாக திகழும் என தான் நம்புவதாக தெரிவித்த அவர் ,

ஜனாதிபதி அவர்களின் தற்கால நடவடிக்கைகளில் மக்கள் மிகவும் கவரப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி உறுதியாக இருப்பது இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி முன்வர வேண்டும் என கருத்து தெரிவித்த அவர் அண்மைக் காலமாக முஸ்லிம் பெண்களை இலக்கு வைத்து சிலர் சமூக ஊடகங்களில் போலியான வதந்திகளை பரப்புகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு பரப்பப்படுகின்றன,

முஸ்லிம் பெண்களைப் போன்று ஏனைய சமய பெண்கள் முகம் மூடி ஹிஜாப் அணிந்து விபச்சாரம் மற்றும் சமூக சீர்கேடான பல விடயங்களில் ஈடுபடுவதால் முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிம் பெண்களின் கன்னியத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. எனவே இதற்கெதிரான நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒருவேளை முஸ்லிம் பெண்கள் முகம் மூடி ஹிஜாப் அணிவதை தடைசெய்யும் விதமாக சட்டம் நிறைவேற்றப்பட்டால், முஸ்லிம் பெண்களை போன்று ஆடையணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் யார் என்பது வெளிப்படையாக தெரியவரும் மட்டுமல்ல எதிர்காலத்தில் இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் இது போன்ற முடிவை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]