இலங்கையில் ஐந்தரை இலட்சம் சிறார்கள் போசாக்கின்மையால் பாதிப்பு

இலங்கையில் சிறுவர் சனத்தொகையில் 5 இலட்சத்து 62 ஆயிரத்து 288 சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் சுற்றில் மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வாசுதேவ நாணயக்கார எம்.பி. தனது கேள்வியில், இலங்கையில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, அதனைத் தீர்மானிக்கும் முறையியல், சிறுவர் சனத்தொகையில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் சதவீதம் மற்றும் இதனால் மரணமடைந்துள்ள சிறுவர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களைக் கோரியிருந்தார்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,

“ஊட்டச்சத்து குறைபாடுள்ள பிள்ளைகளில் மூன்று பிரிவினர் உள்ளனர். அதில் வயதிற்கேற்ப சரியான பாரத்தைக் கொண்டிராத பிள்ளைகள், நிறை குறைந்த பிள்ளைகள் என்றும், வயதிற்கேற்ப சரியான நீளம் அல்லது உயரத்தைக் கொண்டிராத பிள்ளைகள், உயரம் குறைந்த பிள்ளைகள் என்றும், நீளம் மற்றும் உயரத்திற்கேற்ப சரியான நிறையைக் கொண்டிராத பிள்ளைகள், பருமன் குறைந்த பிள்ளைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர். அதில் நிறை குறைந்த 2,43,066 சிறுவர்களும், உயரம் குறைந்த 1,43,955 சிறுவர்களும், பருமன் குறைந்த 1,77,267 சிறுவர்களும் என மொத்தம் 5,64,288 சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சமூக விஞ்ஞான மற்றும் சுகாதார ஆய்வுகள் மூலம் மற்றும் சுகாதார அமைச்சின் குடும்பநல சேவை அலுவலகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் போசனை மீதான ஆய்வின் மூலம் மேற்படி எண்ணிக்கை கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை சிறுவர் சனத்தொகையில் 36.1 வீதமாகும்” – என்றார்.

இதேவேளை, சுகாதார அமைச்சால் திரட்டப்பட்ட தகவல்களில் ஊட்டச்சத்து குறைபாட்டு நிலைமை சுழற்சியாகத் தாக்கம் செலுத்தும் காரணத்தால் ஏற்படக்கூடிய சிறுவர் மரணம் தொடர்பான விவரங்கள் உள்வாங்கப்படவில்லை எனவும் இதன்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]