இலங்கைப் போக்குவரத்துச் சபையின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

இலங்கைப் போக்குவரத்துச் சபை

யாழ்ப்பாணம்; இலங்கைப் போக்குவரத்துச் சபையின் போராட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் சேவையில் ஈடுபடுவதுடன், வவுனியா பஸ் நிலையத்தில் ஒரு பகுதி இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் கடந்த 3 தினங்களாக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாதென பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்தனர்.

பணிப்புறக்கணிப்பின் மூன்றாம் நாளான இன்று வடமாகாண முதலமைச்சரை கொழும்பில் இருந்து வருகை தந்த தொழிற்சங்கத்தின் குழுவினர் முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
அந்த சந்திப்பின் போது, வவுனியா பஸ் நிலையத்தில் ஒரு பகுதி இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு ஒதுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வெளிமாவட்டத்தில் இருந்து வரும் பஸ்கள் வவுனியா பேருந்து தரிப்பிடத்திற்கு செல்ல அனுமதியில்லை என்றும், இணைந்த சேவையின் கீழ் தற்போதுள்ள 40 வீதம் இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கும் 60 வீதம் தனியாருக்கென்றும் வரைபு ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.

அந்த வரைபின் ஊடாக இரு போக்குவரத்துச் சேவையினரும் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும். அதேநேரம், வெளிமாவட்டங்களில் இருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பயணிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கு பேருந்து தரிப்பிடம் ஒன்றிணை அமைப்பதற்குரிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன. அந்த கோரிக்ககைளுக்கு ஏற்ப தரிப்பிடம் அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 2.00 மணிமுதல் இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் தமது பணிப்புறக்கணிப்பினை கைவிட்டு மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]