இலங்கைக்கு மேலும் இரு வருட கால அவகாசம்- நிறைவேறியது 40/1 தீர்மானம்

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்களை முன்னெடுக்கும் வகையில் 40/1 தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்த இந்த தீர்மானத்தை திருத்தங்களின்றி இணை அனுசரணை வழங்க இலங்கை இறுதி நேரத்தில் இணங்கிக்கொண்டது.

இதற்கான தீர்மான முன்வரைவு, ‘இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில், முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள சபையின் 43ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில், 2021 மார்ச் மாதம், விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விரிவான அறிக்கையுடன், சபையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்த்த் தீர்மானத்தில், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெனிவா நேரப்படி இன்று பிற்பகல் புதிய தீர்மான வரைவு மீது விவாதம் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.

அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]