இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் கப்பல் சேவை : அனுமதிகோரும் தமிழ்நாடு அரசு

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமிழ்நாடு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் நடந்து வந்த பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்புவதற்கு வசதியாக, இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு, தமிழ்நாடு அரசாங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

“வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள், கப்பல்துறை பணியகம் மற்றும் தமிழ்நாடு அரசின் அதிகாரிகளுக்கிடையில் கடந்த பெப்ரவரி மாதம் இது தொடர்பான ஒரு கூட்டம் நடைபெறவிருந்தது. எனினும், அரசியல் குழப்பங்களால் இந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நாடு திரும்பி மீளக் குடியேற விரும்பும் அகதிகளுக்கு உதவும் வகையிலான அறிக்கை ஒன்றுடன், கடிதம் ஒன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என்று தமிழ்நாடு அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி- கொழும்பு கப்பல் சேவையையா அல்லது, இராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவையையா அகதிகள் விரும்புகிறார்கள் என்று தீர்மானிக்க முன்னர், மத்திய அரசுடன் கலந்துரையாட வேண்டியுள்ளது. என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டில் நாடு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது. முகாம்களில் உள்ள அகதிகள் இங்கிருந்த செல்லும் போது தமது உடைமைகளையும் கொண்டு செல்லவே விரும்புகின்றனர்.

தாம் திரும்பும் போது, கப்பலில் தமது உடைமைகளை எடுத்துச் செல்லவே பெருமளவானோர் விரும்புகின்றனர் என்று வதிவிடமற்ற தமிழர்களின் புனர்வாழ்வு மற்றும் நலன்புரி ஆணையாளர் பி.உமாநாத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாத கணக்கின்படி, தமிழ்நாட்டில் 62,629 இலங்கை தமிழ் அகதிகள், 107 முகாம்களிலும், 36,794 பேர் முகாம்களுக்கு வெளியிலும் வசிக்கின்றனர் என்றும் அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]