இறக்குவானையில் சிறுபான்மையினர் மோதல் நடவடிக்கை எடுக்குமாறு இராதா கோரிக்கை

இறக்குவானைப் பகுதியில் இரண்டு சிறுபான்மை குழுவினருக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்ச்சியாக நடைபெற்று நேற்றுமுன்தினம் ஒருவர் பலத்த காய்ஙகளுக்கு உள்ளான நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு குழுக்களிலும் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் மலையக மக்கள் முன்னணயின் உப தலைவர் ரூபன் பெருமாள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

நான் இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து மதத் தலைவர்களையும் தொடர்புபடுத்தி இனிமேல் எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்.

இந்த நாட்டில் சிறுபான்மையினராக இருக்கின்ற நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் அது எமது சமூகத்தையே பாதிக்கும்.எனவே, எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் அதனைப் பேச்சுகள் மூலம் தீர்த்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து வேறு வழிகளை கையாள நினைத்தால் அதன் இழப்புகளை நாமே சந்திக்க வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இறக்குவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பமுனுசிங்ஹவிடம் வினவிய போது,
தற்பொழுது நிலைமை சுமூகமான நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக இரண்டு குழுக்களில் இருந்தும் 6 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் இன்னுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதாகவும் அவர்களையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதுடன், இது தொடர்பாக மதத் தலைவர்களை அழைத்து நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்ததோடு தற்பொழுது அங்கு நிலைமை சுமுகமாக இருப்பதாகவும், பொலிஸார் நிலைமைகளை கண்காணித்து வருவதாகவும் தெரிவத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]