இறக்காமம் மாயக்கல்லி பகுதிக்கு நுழைவதற்கு இடைக்காலத் தடை

இறக்காமம் மாயக்கல்லி பகுதியில் கடந்த 3 தினங்களாக இடம்பெற்று வரும் இனமுறுகலை அடுத்து இப்பிரதேசத்தில் எவரும் நுழையாதவாறு மே மாதம் 17ஆம் திகதி வரை அம்பாறை மேலதிக மாவட்ட நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொலிஸாரின் உத்தரவை மீறி மாயல்கல்லி மலையடிவாரத்தில் பள்ளியான் செய்னுலாப்தீன் என்பவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரைக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பமான வேளையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினருக்கும் இறக்காமம் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற முறுகலை அடுத்து பொலிஸாரினால் இந்நிர்மாணப் பணிகள் தடுக்கப்பட்டன.

இதயைடுத்தே அம்பாறை மேலதிக மாவட்ட நீதவான் சசிகா லக்மாலி தசநாயக்க நேற்று இந்த உத்தரவை கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெத்தசிங்கவுக்கு விடுத்தார்.

இதனையடுத்து தற்போது 24 மணிநேர இறுக்கமான பாதுகாப்பு பலப்படுத்தப்டபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பிரதேசத்தில் தொடர்ந்தும் மக்களின் எந்த நடமாட்டமும் இன்றி பதற்றம் மிகுந்த அமைதியும் நிலவுகிறது.

சமாதான உறவுகள் சீர்குலையும் பட்சத்தில் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸாருக்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் விஷேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், பள்ளியான் செய்னுலாப்தீன் முஸ்தபா லெவ்வை சுல்பிகார் அல்ஹாஜ் சரிபுத்தம்பி யூசுப், வண: அம்பேபிடிய சீலரத்ன தேரர் ஆகியோர் மே மாதம் 17ஆம் திகதி அம்பாறை மேலதிக மாட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]