இரா.சம்பந்தன் ஏன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்? எம்.ஏ.சுமந்திரன் விளக்கம்!

நாட்டினை சர்வதிகாரத்திற்கு இட்டுச் செல்வதனை தடுக்க வேண்டும் என்பதற்காகவே முதலாவது மனுவை உச்ச நீதிமன்றத்திலே தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவே வழங்கினார். இதனால் தென்னிலங்கை மக்கள் மத்தியில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மரியாதை ஏற்பட்டு இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் செவ்வாய்கிழமை (25.12.2018) 02.00 மணியளவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சேயோன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் சுடரேற்றிய பின்  உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டை குடியரசாக இருந்து முடியரசாக மாற்றுவதற்கான சதிவேலைகள் அண்மையில் நடந்தேறியபோது அதனைத்தடுத்து நாட்டினுடைய ஜனநாயத்தையும், இறைமையும் பாதுகாப்பதற்கே தமிழ்தேசிய கூட்டமைப்பும் இணைந்து கொண்டது.

19ஆவது சீர்திருத்தத்திற்கு முன்னர் ஒரு பிரதமரை பதவி நீக்க 3 காரணங்கள் இருந்தன. அதில் ஒன்று ஜனாதிபதி கையொப்பம் இட்டு ஜனாதிபதியை நீக்கி வைக்க முடியும். ஆனால் 19ஆவது சீர்திருத்தத்தில் அந்த மூன்று காரணிகளில் ஜனாதிபதி கையொப்பம் இட்டு பிரதமரை நீக்கமுடியும் எனும் காரணி நீக்கப்பட்டது. இந்தநிலையில்தான் அதிகாரத்துக்கு அப்பால் ஜனாதிபதியால் பிரதமர் நீக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தோற்கடிப்பதற்காக பொது வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச்செய்தோம். இவ்வாறு தோற்கடிக்கப்பட்ட நபரையே பிரதமராக்கியிருந்தார். அவர் பாராளுமன்றத்திலே பெருபான்மையை நிருபிப்பிதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை விலைபேசப்பட்டார்கள். இக்காலகட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுகிடையும் பேரம்பேசப்பட்டது. அதில் வியாளேந்திரன் எம்.பி. அவர்கள் பக்கம் சென்றிருந்தார். ஏனையவர்கள் அவர்களின் கருத்துக்கு செவிசாய்க்கவில்லை.

பெருபான்மையை நிரூபிக்க முடியாமலே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதாவது 19 ஆவது சீர்திருத்தத்திற்கு முன்பு பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஒரு வருடம் முடிவடைந்தால் ஜனாதிபதியால் கலைக்கமுடியும். 19 ஆவது சீர்திருத்ததின் பிரகாரம் நான்கரை வருடம் பாராளுமன்றம் கடந்த பிற்பாடே பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தை ஜனாதிபதி கருத்திற் கொள்ளாமாலே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால் நீதிமன்றம் சென்று ஜனநாயக்தை உறுதிப்படுத்தியுள்ளோம். இதனால் தென்னிலங்கை மட்டுமல்ல சர்வதேசத்திலும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மரியாதை உள்ளது.

இந்த நாட்டிலே இப்போதுதான் பலருக்கு அரசியல் யாப்புபற்றியும் அதில் என்ன கூறப்பட்டிருக்கின்றது என்பது பற்றியும் தொரிந்திருக்கின்றது,

தமிழ்தேசிய கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றதாக பலர் பேசுகின்றார்கள். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கோ நாம் நீதிமன்றம் செல்லவில்லை. நாட்டை சர்வதிகாரப்போக்கு இட்டுச் செல்லாது ஜனநாயகத்தை பாதுகாக்கவே நீதிமன்றம் சென்றிருந்தோம். இந்த நாடு சர்வதிகாரப்போக்கிற்கு தள்ளப்பட இருந்தநிலையில் அதனை முளையோடு கிள்ளியெறிந்த நிலை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே இருப்பதாக பலராலும் பேசப்படுகின்றது.

இந்தநாட்டிலே தமிழ்மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெறுவதற்கு உரித்துண்டு.அதனைப்பெறுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தாகம், உணர்வு, பயணம் இருக்கின்றது.   எனத்தெரிவித்தார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]