இரா.சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்துகொண்ட மஹிந்தவால் பரபரப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் ஆசனத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அமர்ந்து கொண்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அருகில் மஹிந்த ராஜபக்ஷ ஆசனம் உள்ளது.

அமர்வு ஆரம்பமான பின்னர், சபைக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். அப்போது சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவையில் இருக்கவில்லை.

சில நிமிடங்கள் கழித்து, நாடாளுமன்ற பணியாளர் ஒருவர் அதனைப் பார்த்து விட்டு, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவிடம், தவறான ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்திருக்கும் விடயத்தை கூறினார்.

சனத் நிசாந்த உடனடியாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு அருகே சென்று ஆசனம் மாறி அமர்ந்திருப்பதை தெரிவித்தார். உடனடியாக மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனின் ஆசனத்தை விட்டு எழுந்து தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வாழ்த்துக் கூறியிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா.சம்பந்தனிடம் இருந்து கைப்பற்றுவதற்கான முயற்சிகளை ஒன்றிணைந்த எதிரணி மேற்கொண்டு வரும் நிலையில், சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்தமை சபையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]com