இராணுவத் தலைமையகம் இடமாற்றியதால் – கொழும்புக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்

வெளிநாட்டு ஹோட்டலுக்காக கொழும்பிலிருந்து இராணுவத் தலைமையகத்தை அப்புறப்படுத்தியதனால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் 500 கோடி ரூபா செலவு ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கொழும்புக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கடந்த அரசாங்கம் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி இராணுவத் தலைமையகத்தை திடீரென இடமாற்றம் செய்ததற்கான காரணத்தை கண்டறிவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றின் அவசியம் தொடர்பிலும் இச்சந்தர்ப்பத்தில் அமைச்சரவை உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.

இராணுவத்துக்கென தலைமை அலுவலகம் ஒன்று இல்லாமையினால் தற்போது 15 கட்டடங்களில் அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகியிருப்பதுடன் நேர விரயம், செலவு மற்றும் கொழும்புக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் நேற்றுக் காலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.