இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது விக்கியிடம் ஜனாதிபதி திட்டவட்டம்

இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள், சட்டமா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த சந்திப்பில் காணாமல் போனோர் தொடர்பாகவும், இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும், வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது யாழ். குடாநாட்டில் 3800 ஏக்கர் மட்டுமே இராணுவத்தினர் வசம் காணப்படுவதாகவும், பாதுகாப்பு அளிப்பதற்காகத் தேவையானவற்றை மட்டும் இராணுவத்தினர் வைத்துக் கொண்டு மிகுதியை மக்களுக்குத் திரும்பக் கொடுக்கவுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் இராணுவத்தினர் நாடுமுழுவதும் நிலைகொண்டுள்ளதாகவும் புதிதாக எவரும் உள்ளீர்க்கப்படவில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் இன்னும் சில மாதங்களில் கையளிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரிடம் இருக்கும் நீர் நிலைகள் விரைவில் திரும்பக் கையளளிக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை வெளியிடுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, பத்திரிகைகளில் அல்லது தொலைக்காட்சியில் அல்லது வேறு விதமாக காணாமற் போனவர்கள் உயிருடன் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டால் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி முன்னிலையில் சில குழந்தைகள் ஒரு கூட்டத்தின் போது இருந்ததாக அடையாளப்படுத்தப்பட்டமை தொடர்பில் முதலமைச்சர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அவர்களை அவர்களது கல்லூரியில் தாம் சந்தித்ததாகவும் அவர்கள் சம்பந்தமாக வேறு எவையும் தமக்குத் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் காணாமற் போயிருந்தால் படம் எடுத்த பின்னர் காணாமற் போயிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தைகளின் பெற்றோர்கள் அந்த தினத்திற்கு முன்னரேயே காணாமற் போயிருப்பதாகக் கூறினால் அவை தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தடுப்புக் காவலில் இருப்போர் தொடர்பாக ஏற்கனவே விவரங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும், தற்பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஐம்பத்து ஏழு தமிழ்க் கைதிகளே இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

தம்மால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வேறு எந்த கைதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்படவில்லையென சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நிரந்தர அலுவலகம் நடைமுறைப்படுத்தப் படாது இருக்க சில சட்ட திருத்தங்களே காரணம் என்றும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தவறான வழியில் எவரேனும் கைது செய்யப்பட்டிருந்தாலோ அவர்கள் தடுப்புக் காவலில் வைத்திருக்கப்பட்டாலோ உடனடியாக மனித உரிமை ஆணைக்குழுவிற்குத் தெரியப்படுத்துமாறும் நீதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வேலையில்லா பட்டதாரிகள் 1500 பேருக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]