இராணுவத்திற்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுத்தால் மீண்டுமொரு யுத்தம் ஏற்படும்

இராணுவத்திற்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுத்தால் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் என்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

போர்முடிவடைந்த போது ஐ.நாவுக்கும் அதன்கீழான சபைகளுக்கும் கடந்த அரசாங்கத்தினால், சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகத்துடன் முன்னாள் ஜனாதிபதி கைச்சாத்திட்ட கூட்டறிக்கையின் பிரகாரமே தருஸ்மன் தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த அரசாங்கம் முயற்சித்திருந்தாலும் அந்த நடவடிக்கைகள் திருப்தியாகவும் இராஜதந்திர கட்டமைப்புடனும் இருக்கவில்லை.

இந்த நிலையில், உண்மையைக் கண்டறியும் குழுவை அமைக்குமாறு தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் பொறிமுறையின்போது சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையின் அரசமைப்பை சவாலுக்குட்படுத்தும் அதை மீறும் வகையில் செயற்படுவதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. இதனை நாம் 2015 ஆம் ஆண்டிலேயே ஐ.நாவுக்கு அறிவித்து விட்டோம்.

நாட்டின் அரசமைப்பில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க இடமில்லை. ஆனால், வெளிநாட்டு பங்களிப்பு அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

ஸ்ரீலங்காவின் அரசமைப்பை மீறிச்செயற்படுமாறா மேற்படி நாடுகள் கூறுகின்றன? இது நாட்டின் சுயாதீனத்துக்கு விடுக்கப்படும் சவாலாகவே கருதப்படுகின்றது.

எமது நாட்டு மக்களின் மனித உரிமைகளை காக்கும் கடப்பாடு எமக்கு உள்ளது. இது விடயத்தில் சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிக்கமுடியாது. அரசுக்கு இல்லாத அக்கறையா அனைத்துலக சமூகத்துக்கு இருக்கப்போகின்றது?

புதியதொரு அரசமைப்பை உருவாக்கி நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிப்பதற்கு அரசு தயாராகிவரும் நிலையிலும் அது குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிரவே அரசாங்கம் தயாராக இருக்கின்றது. பௌத்த மதத்திற்குள்ள முன்னுரிமையும் அப்படியே தான் இருக்கும்.

இந்த நிலையில், விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறும், நல்லிணக்கத்தை எற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றன.

ரயில்பாதையின் தண்டவாளத்தின் இரண்டு நிரல்கள் எப்படி ஒன்று சேராதோ, அதுபோல்தான் விசாரணையையும், நல்லிணக்கத்தையும் ஒன்று சேர்க்க முடியாது.

அதையும் மீறி, இவர் தான் அதைச்செய்தார், இது தான் போர்க்குற்றம் என சாட்சியங்கள் வழங்கப்பட்டால் அது நாட்டுக்காக இத்தனை ஆண்டுகளாகப் போராடிய இராணுவத்தினருக்கு கவலையையும், கலங்கத்தையும் தான் ஏற்படுத்தும்.

மேலும், சிங்கள, தமிழ் மக்களிடையே விரிசல் ஏற்படுவதோடு, மீண்டுமொரு போருக்குகூட அது வழியமைத்து விடும் ஆபத்து காணப்படுகின்றது என்றார்.