இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருக்கின்றது

தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பும் சிங்களக் குடியேற்றங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருக்கின்றது என, வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான ஆ.புவனேஸ்வரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் தெரிவித்துள்ளார்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வில் நேற்று புதன்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் அமர்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். இதன்போதே வடமாகாணசபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு எனும் இடத்தில் 200 வருடங்களுக்கு மேலாக பரம்பரையாக வாழ்ந்த மக்கள் தமது சொந்த நிலத்தை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரி 59 வது படைப்பிரிவின் முகாம் வாசலில் சுமார் 200 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் கூட்டமைப்பு தலைவர்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டார்கள். ஜனாதிபதியும் உடன் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனாலும் அம்மக்களின் நிலம் விடுவிக்கப்படவில்லை.

இதனால் பரம்பரையாக வாழ்ந்த அம்மக்களின் வாழ்வியல் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த மக்களை சொந்த நிலத்தில் குடியேற்றாமல் காடுகளில் குடியேற்றியமையால் பல்வேறு வாழ்வியல் மற்றும் சமூக பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

அம்மக்கள் கடற்தொழிலையே பிரதானமான வாழ்வியலாக கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் கடற்கரைகளில் இராணுவம் இருந்துகொண்டு கடலுக்கு சென்று தொழில் செய்ய விடாமல் தடுக்கின்றனர். இதன்மூலம் எமது மக்களின் தொழில் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. 200 வருடங்களுக்கு மேலாக எமது மக்கள் வாழ்ந்த நிலத்தில் இராணுவம் கட்டிடங்கள் அமைத்து சொகுசாக வாழ்கின்றனர்.

கேப்பாபிலவு புதுக்குடியிருப்பு வீதி இராணுவ பயன்பாட்டுக்கும் சிங்கள மக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே திறக்கப்படுகின்றது. அந்த வீதியை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான நாங்களும் அவ்வீதியால் செல்ல முடியாத இராணுவ மேலாதிக்க நிலையே இன்றும் காணப்படுகின்றது.

அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இராணுவத்திற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் சுமார் 148 மில்லியன் ரூபா வழங்கினால் 111 ஏக்கர் காணியை விடமுடியும் எனவும் ஆனால் 70 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாதெனவும் இராணுவம் கூறுகின்றது. தமது சொந்த நிலத்தையே பணம் கொடுத்துத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். இவ்விடயத்தில் ஐ.நா தலையிட்டு இராணுவம் ஆக்கிரமித்த நிலத்தை விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி முல்லைத்தீவு மாவட்டத்தில் இன விகிதாசார பரம்பலை மாற்றியமைக்கும் முகமாக திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

அநுராதபுர மாவட்ட மக்களை முல்லைத்தீவு வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் இணைத்து இன விகிதாசாரப் பரம்பலை மாற்றியமைத்துள்ளார்கள். அத்துடன் இப்பிரதேச செயலக பிரிவில் பூர்வீகமாக தமிழ் மக்களால் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களை மகாவலி டு வலயமாக பிரகண்டனப்படுத்தி அரசுடமையாக்கி அக்காணிகளை சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளனர். பரம்பரையாக பயிர் செய்த தமிழ் மக்கள் உறுதிகள் அனுமதிப்பத்திரங்களை காட்டி நீதி கோரினாலும் அம்க்களுக்கு எந்தவித நியாயமும் கிடைக்கவில்லை.

தற்போதைய அரசாங்கம் எந்த விடயத்திற்கும் தீர்வு வழங்குவதில் அக்கறை காட்டவில்லை. எதற்கும் செவிசாய்கவில்லை. காலத்தை இழுத்தடிப்பதிலேயே குறியாக இருக்கின்றது.

எனவே உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் தமிழர் தொடர்பான விடயங்களில் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]

  • குறிகள்
  • un