இராணுவத்திடம் எவரும் சரணடையவில்லை : கோட்டாபய ராஜபக்ஷ

உள்நாட்டு யுத்தத்தின் பொது இராணுவத்திடம் எவரும் சரணடையவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பின் ஆங்கில ஊடகமொன்றுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிராமங்களிலுள்ள தமிழர்களுக்கு இலங்கை ஜனாதிபதி, பிரதமரின் பெயரே தெரியாது, அவ்வாறான நிலையில் எவ்வாறு இராணுவ அதிகாரியைச் சுட்டிக்காட்டி அவரிடமே தங்கள் குடும்பத்தவர்கள் சரணைடைந்தனர் எனத் தெரிவிக்க முடியும்.

இவை யுத்தம் முடிவடைந்த பின்னர் உருவாக்கப்பட்ட கதைகள் . இலங்கை அரசு உருவாக்கவுள்ள காணாமற்போனோர் குறித்த அலுவலகம் யதார்த்தபூர்வமற்ற ஒன்று. காணாமற்போனவர்கள் குறித்து பல சம்பவங்கள் உள்ளன. அதில் ஓர் அம்சத்தையே நான் நவநீதம்பிள்ளையிடம் சுட்டிக்காட்டினேன். யுத்தத்தில் தங்கள் குடும்பத்தவர்கள் இறந்ததை ஏற்பதற்கு எப்படி பெற்றோர்கள் தயாரில்லை என்பதையும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என அவர்கள் நம்புவதையும் நான் சுட்டிக்காட்டினேன்.

இளைஞர்கள், யுவதிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையும்போது அவர்களது பெற்றோர்கள் அங்கு இருப்பதில்லை. தங்கள் பிள்ளைகள் எங்கிருக்கின்றார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இதன் காரணமாக அவர்கள் மோதலில் கொல்லப்பட்டதும் அவர்களின் உடல்கள் மீட்கப்படாதபோது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருப்பதாகக் கருதுகின்றனர்.

இலங்கையில் இரகசிய முகாம்கள் என்று எவையும் இல்லாதபோதிலும் இந்தப் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நம்புகின்றனர்.

நவநீதம்பிள்ளை வடக்கில் மக்களை சந்தித்தவேளை அவரிடம் பலர் தங்கள் குடும்பத்தவர்கள் இரகசிய முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்திருந்தனர். அவரும் அதனை நம்பினார்.


காணாமற்போனவர்களில் சிலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இதற்கான உதாரணத்தை நான் நவநீதம்பிள்ளையிடம் முன்வைத்தேன்.

காணாமற்போனவர்கள் விவகாரம் விசாரணை செய்வதற்கு இலகுவான ஒன்றல்ல. அது மிகவும் குழப்பகரமானது. இதேவேளை, இராணுவத்திடம் எவரும் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. மக்கள் பல வதந்திகளை அடிப்படையாக வைத்து பல கதைகளை முன்வைத்தனர். அவர்கள் சிலர் சொன்னதாகவே தெரிவித்திருந்தனர். சரணடைவதைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை. யுத்தத்தின் யதார்த்தம் இதுவே. இவற்றை நம்பமுடியாது.

வடக்கில் யுத்தம் இடம்பெற்றவேளை 5,000 படையினர் கொல்லப்பட்டனர். வலுவான இராணுவத்திலேயே இத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருப்பர் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]