இரண்டாவது மனைவியை படுகொலைசெய்த கணவன் கைது

திருத்துறைப்பூண்டி அருகே இரண்டாவது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்ததால் கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு திருமணமாகி விவகாரத்து ஆகியுள்ளது.

இதன்பின்னர் அவரும் அதே பகுதியை சேர்ந்த சத்யாவும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி சத்யா ஐயப்பனை நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஐயப்பன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சத்யாவிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக பொலிஸ்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் இருவரையும் போலீசார் சேர்த்து வைத்து அனுப்பியுள்ளனர்.

ஐயப்பன் தனது அக்கா வீட்டிற்கு மனைவி சத்யாவுடன் நேற்று சென்றுள்ளார். அப்போது ஐயப்பனுக்கும் அவரது மனைவி சத்யாவிற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி ஐயப்பன் சத்யாவை அருகில் கிடந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.

தகவல் அறிந்து வந்த பொலிஸார் சத்யாவின் உடலை மீட்டு ஐயப்பனை கைது செய்தனர். ஐயப்பனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சத்யா வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டதால் கொலை செய்ததாக தெரிவித்தார்.

மேலும் ஐயப்பன் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று செயல்படுவதால் அவரை மருத்துவ பரிசோதனை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.