இரட்டைப் படுகொலை வழக்கு டிசம்பர் 06ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு

இரட்டைப் படுகொலை வழக்கு டிசம்பர் 06ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் கடந்த ஆண்டு செப்ரெம்பெர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை வழக்கு விசாரணை புதன்கிழமை 22.11.2017 ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வேளையில் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜெனீராபானுவின் (வயது 32) கணவரான ஐ.எம். மாஹிர் தனது தரப்பு சட்டத்தரணியுடன் நீதிபதியின் முன் ஆஜராகி மேற்படி படுகொலை வழக்கு விசாரணையை பொலிஸாரிடமிருந்து புலனாய்வுத் துறைக்கு பாரப்படுத்துமாறு வேண்டுகோளை முன் வைத்தார்.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வழக்கு விசாரணையில் தனக்கு திருப்தியில்லாதிருப்பதாக அவர் தனது வேண்டுகோளை சட்டத்தரணியூடாக நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

படுகொலைச் சந்தேக நபர்களில் இருவர் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (நவம்பர் 22, 2017) ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை பிணையில் விடுதலையான ஏனைய நால்வரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகியிருந்தனர்.

இவ்வேளையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களில் இருவரையும் டிசம்பர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]