இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட வாழைப்பழங்கள் – பொதுமக்களே எச்சரிக்கை!!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்திலுள்ள சந்தைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டு இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட பெரும் தொகையான வாழைப் பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வாழைப் பழங்கள் நேற்று சுகாதாரத் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செங்கலடி பிரதேசத்திலுள்ள சித்திரைப் புத்தாண்டு விஷேட சந்தைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டு மனித உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட நிலையில் இருந்த பெரும் தொகையான வாழைப் பழங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சித்தாண்டி சந்தைக்கு அருகில் வாழைப்பழங்களுக்கு இரசாயன பதார்த்தம் பூசப்படுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற செங்கலடி பிரதேச சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான செல்வராஜா தவேந்திரராஜா மற்றும் சிவசேகரம் சிவகாந்தன் ஆகியோர் இவ்வாறு 134 வாழைக்குலைகளை கைப்பற்றியுள்ளனர்.

வாழைக் காய்களை பழுக்கச் செய்வதற்காக ஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) என்ற இரசாயனப் பதார்த்தம் வாழை குலைகளில் பூசப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரசாயன பதார்த்தம் காய்களை விரைவாகப் பழுக்கச் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டாலும் வாழைக் காய்களில் பூசிப் பயன்படுத்தப்படுவதில்லை. அறையினுள் குறித்த பதார்த்தத்தின் போத்தல் மூடியை திறந்து வைப்பதன் மூலம் காய்கள் விரைவாக பழமாகும் இதைத் தோலில் பூசுவதினால் மனித ஆரோக்கியத்துக்கு கேடுவிழைவிக்கும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

மேலும், மீட்கப்பட்ட வாழைக்குலைகள் உரிமையாளரின் அனுமதியுடன் கொடுவாமடு பகுதியில் அழிக்கப்பட்டதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]