இயற்கையின் கோரத்தாண்டவம் இதுவரை 91 பேர் பலி : 86 பேரை காணவில்லை: 5 இலட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த ஒருவார காலமாக நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை சீரற்ற காலநிலை காரணமாக 91 பேர் உயிரிழந்துள்ளதுடன், 86 பேர்வரை காணாமல் போயுள்ளதாக மாவட்டவாரியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

களுத்துறையில் மாவட்டத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

மண்சரிவுகளில் சிக்கி காணாமல் போன நபர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


மலையகப் பகுதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் ஹட்டன், பொகவந்தலாவ போன்ற பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதாகவும், இதனால் வாகன சாரதிகள் பல அசெகரியங்களுக்கு உள்ளாகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் தற்போது மகாவலி ஆறு பெருக்கெடுத்துள்ளதால் ஆற்றின் அருகில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளபட்டுள்ளனர்.

இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வரும் அதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் புயல் காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வு கூறியுள்ளது.

நெலுவையில் தேயிலை தொழிற்சாலை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு

நெலுவ பிரதேசத்தில் தேயிலை தொழிற்சாலை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் சுமார் ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் சிக்கிய மேலும் பலரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரியில் மண் சரிவு 10 பேர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அனர்த்தத்தினால் பல சொத்துக்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

அத்துடன் களுகங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக இரத்தினபுரி நகர் வெள்ளத்தில் முழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

நெடுஞ்சாலையிலும் வெள்ளம்

தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ மற்றும் வெலிப்பன்ன ஆகிய இடங்களின் நுழை வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதிகள் ஊடாக உள் செல்லவோ அல்லது வெளி செல்லவோ முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறையில் மண்சரிவில் சிக்கிய அறுவர் உயிரிழப்பு

களுத்துறை புளத்சிங்கள போகாவத்தை, தெல்பவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காணாமல் போயுள்ளனர்.

புளத்சிங்கள கொபவக திவலகந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய எட்டு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் தொடரும் அடை மழை காரணமாக பல வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]