இயற்கைக்குப் பங்கம் இல்லாமல் செயற்படும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உண்டு…

இயற்கைக்குப் பங்கம் இல்லாமல் கால்நடை வளர்ப்பாளர்கள் செயற்படுகின்ற பொது அவர்களுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று கால்நடை வளர்ப்பபோர் ஒன்றியத்தின் செயலாளர் காளிக்குட்டி நாகேந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திங்கட்கிழமை (24) மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கார்மலைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பண்ணையார்களின் இடர்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இதையடுத்து கால்நடைவளர்ப்பாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் எமது மக்கள் பயிர்ச்செய்கை மற்றும் விலங்கு வேளாண்மை என்பவற்றைக் கூடுதலாகச் செய்து வருகின்றார்கள். அவர்கள் கால்நடைகளை வளர்க்கும் போது பல சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். ஏனெனில் பயிர்ச்செய்கையின் மத்தியில் கால்நடைகளை வளர்ப்பது மிகக் கடினமானது என்பதால் பயிர்ச்செய்கைக்கு அப்பால் சென்று இவற்றை வளர்க்கும் நிர்ப்பந்தமான சூழ்நிலையில் பண்ணையாளர்கள் காணப்படுகின்றார்கள்.

பால் என்பது நிறையுணவு இதனை உற்பத்தி செய்வதென்பது மிகவும் முக்கியமானதொரு விடயம். இது ஒரு சுய தொழிலாக இருந்தாலும் கூட இந்தப் பால் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக் கூடியவாறு எமது பண்ணையார்கள் பட்தொட்டிகளெல்லாம் வைத்து நிரந்தரமாகப் பரம்பரை பரம்பரையாக இதனை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்த மட்டில் நிலவளம் கூடிய ஒரு பிரதேசமாக இருந்தாலும் கூட பண்ணையார்கள் மேய்ச்சற்தரைப் பிரச்சனையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் கால்நடைகளை குறிப்பிட்ட ஒரு பிரதேசங்களுக்கு அப்பால் கொண்டு செல்லுகின்ற போது பல நெருக்குவாரங்களுக்கு உட்படுகின்றார்கள். வனஇலாகா காப்பாளர்கள், அண்டைய அயலிலுள்ள பயிர்ச்செய்கையாளர்கள் போன்ற காரணிகளால் ஏற்படுகின்ற பல சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் கால்நடை வளர்ப்பினை மேற்கொள்கின்றார்கள்.

கடந்த காலத்தில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்று இனங்காணப்பட்ட மேய்ச்சற்தரை இடங்களை வரையறுத்து வர்த்தமானியில் பிரசுரிப்புச் செய்கின்ற போது தொல்லைகள் இல்லாமல் பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளைப் பராமரிக்க முடியும்.

எமது மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கூட நாங்கள் வனஇலாகா அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கின்றோம். காடுகளுக்கு, இயற்கைக்குத் தொல்லை இல்லாமல் பண்ணையாளர்கள் கால்நடைகளை வளர்க்கின்ற போது அவர்களுக்கு எந்தப் பிரச்சினைகளையும் கொடுக்கக் கூடாது எனத் தெரியப்படுத்தி இருக்கின்றோம். இயற்கைக்குப் பங்கம் இல்லாமல் கால்நடை வளர்ப்பாளர்கள் செயற்படுகின்ற பொது அவர்களுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் இருக்கின்றது.

இயற்கைக்குப் இயற்கைக்குப்

பாலைச் சந்தைப் படுத்தல் மற்றும் நீண்டகாலத்திற்கு அவற்றைப் பாதுகாத்தல் போன்ற பிரச்சனைகள் தொடர்பில் கால்நடை வளர்ப்பாளர்களால் குறிப்பிடப்பட்டது. பாலைச் சந்தைப்படுத்தலை இலகுபடுத்துதல் என்பவற்றிற்கு அப்பால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் பெருமளிவில் உற்பத்தி செய்ய்பட்டாலும் கூட இந்தப் பாலை மையமாகக் கொண்ட பால்பொருள் உற்பத்தித் தொழிற்சாலை இல்லாமல் இருப்பது ஒரு பாரிய குறைபாடாகவே இருக்கின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் பாராளுமன்றத்திலும், ஜனாதிபதி செயலணியிலும் தெரியப்படுத்தி இருக்கின்றோம். அத்தோடு இவ்விடயங்கள் தொடர்பில் ஆர்வமுள்ளவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்குரிய வழிகாட்டல்களை சரியான முறையில் வடிவமைத்துக் கொடுக்கின்ற போது அதனை அவர்கள் சரியாக நடத்துவதற்குரிய முயற்சியாளர்களாகவும் மாற்றமடைவர். பாலுக்குரிய உத்தரவாத விலை மற்றும் அதனை நீண்டகாலமாகப் பதப்படுத்தி பயன்படுத்துவதற்குரிய எதிர்பார்ப்புகள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றது.

எனவே இந்த நல்லாட்சி அரசாங்கம் மட்டக்களப்பின் அபிவிருத்தி என்கின்ற எண்ணக்கருவில் பால்மாத் தொழிற்சாலையொன்றை அமைக்கின்ற ஒரு செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். கடந்த காலங்களில் மட்டக்களப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருந்தன. தற்போது சகல தொழிற்சாலைகளும் மூச்சடங்கிப் போய் ஒரு இறப்பு நிலையில் இருக்கின்றன. அவற்றையும் இயங்கச் செய்வதோடு புதிதாக பால்பொருள் உற்பத்தித் தொழிற்சாலையையும் உருவாக்கித் தர வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]