இயக்குனர் கார்த்திக்குடன் இணையும் துல்கர்

வெவ்வேறு வகையான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் துல்கர் சல்மான் தன் தமிழ் சினிமா கேரியரில் பயணம் சார்ந்த ஒரு படத்தையும் சேர்த்துள்ளார்.
வாயை மூடி பேசவும் மற்றும் ஓகே கண்மணி படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்த துல்கர் சல்மான் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
கேனன்யா ஃபிலிம்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் இந்த படம் ஒரு பயணம் சார்ந்த பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கிறது.
“வழக்கமான கிளிஷே காட்சிகள் இல்லாமல்  புதுமையான மற்றும் தனித்துவமான ஒரு பயணம் சார்ந்த படமாக இருக்கும். துல்கர் சல்மான் போன்ற ஒரு நடிகர் இந்த படத்தில் நடிக்க முன்வந்தது படத்துக்கு ஊக்கமாகவும், எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
படத்தில் மொத்தம் நான்கு நாயகியர் நடிக்கின்றனர். நான்கு கதாபாத்திரங்களுமே நன்கு வடிவமைக்கப்பட்டவை. என் நண்பர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் மூலம் துலகர் சல்மானுக்கு நான் கதை சொன்னபோதே துல்கருக்கு கதையும், திரைக்கதையும் பிடித்துப் போய் விட்டது.
படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன, படப்பிடிப்பை துவக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். தமிழ்நாடு மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
அறிமுக இசையமைப்பாளர் தீன தயாளன் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்வது எனக்கு பெருமையான விஷயம்” என மகிழ்ச்சியாக பேசிகிறார் அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக்.