இப்படியும் ஒரு திருட்டா?? கன்றுக்குட்டிக்கு மேக்கப்போட்டவர் கைது!!

கன்றுக்குட்டியைத் திருடி, அதன் முடியை கத்தரித்து, இருந்த முடிகளுக்கு ‘டை’ பூசி, நி​றத்தையே முற்றாக மாற்றி, வீட்டுக்குப் பின்புறமாகக் கட்டிவைத்திருந்த வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிரிபாவ பொலிஸ் அதிகாரத்துக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிரிபாவ, கீழ் கிரிபாவ வயல்வெளியில் கட்டப்பட்டிருந்த, ஒரு வயதும் ஆறு மாதங்களேயான, காவிநிறமான (ப்ரௌன் கலர்) கன்றுக்குட்டியைக் காணவில்லையென, அந்தக் கன்றுக்குட்டியின் உரிமையாளர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டாளரான சுனில் சாமர, தனக்குச் சொந்தமான அந்தக் கன்றுக்குட்டியின் பெறுமதி 60 ஆயிரம் ரூபாயெனத் தெரிவித்துள்ளார்.

தனக்குச் சொந்தமான கன்றுக்குட்டிக்குச் சமமான கன்றுக்குட்டியொன்று, இஹலவெவ வராவெவ பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குப் பின்புறமாகக் கட்டப்பட்டுள்ளது என்றும், அந்தக் கன்றுக்குட்டி கறுப்பு நிறமாக உள்ளதென, அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளருடன் அந்த வீட்டுக்குச் சென்ற பொலிஸார், வீட்டின் உரிமையாளரை அழைத்து விசாரணைக்கு உட்படுத்திய போது, அவருடைய கால்கள் நடுங்கியுள்ளன.

அந்தக் கன்றுக்குட்டியைச் சோதித்தபோது, கால்கள் முதல், உடலின் மேல் பகுதி முழுவதும் கறுப்பு நிறத்திலான டை அடிக்கப்பட்டுள்ளது. எனினும், வயிற்றுப்பகுதியில் ஆங்காங்கே, ​கறுப்பு நிற டை பூசப்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டின் பின்புறமாக இரண்டு கன்றுக்குட்டிகள் கட்டப்பட்டிருந்தனவென தெரிவித்த பொலிஸார், அவ்விரண்டும் திருடப்பட்டவையாகுமென, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்தனர்.

அந்தக் கன்றுக்குட்டிகள் இரண்டையும் கைப்பற்றியதாகத் தெரிவித்த பொலிஸார், அந்த வீட்டின் உரிமையாளரையும் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

திருமணமான சந்தேகநபர், இவ்வாறான குற்றங்களுக்காக, நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகளைப் பெற்றவரெனத் ​தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை, கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]