இன முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் கூருணர்வோடு முன்னாயத்தமாக இருக்க விழிப்புணர்வு

பிரதேசத்தில் அவ்வப்போது தூண்டி விடப்படக் கூடிய இன மத முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் கூருணர்வோடு முன்னாயத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வழங்கப்படவிருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக புதன்கிழமை 16.01.2019 கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையில் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சகவாழ்வுக்கான செயற்திட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள அனைவரும் சிரத்தை எடுக்க வேண்டும்.

அந்த வகையில் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.

அதன் உள்ளுர் சமாதானத்திற்கான இயலளவைக் கட்டியெழுப்பும் இன்னொரு படிமுறையாக பிரதேசத்திலுள்ள கிராம சேவையாளர்களுக்கு மாவட்ட சர்வமத பேரவையின் செயற்பாடுகளைத் தெளிவுபடுத்துவதும், பிரதேசத்தில் அவதானிக்கக் கூடிய இன, மத முரண்பாடுகளை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி எறியக் கூடிய முன்னாயத்தங்களைச் செய்வது பற்றி அறிவூட்டுவதும் இடம்பெறவுள்ளது.

இத்தகைய விழிப்புணர்வுக்கென மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள கிராம சேவையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சமாதான கலந்துரையாடல் செயற்பாடுகளில் அனைத்து இன மதங்களையும் சேர்ந்த அதிகாரிகள், மத அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் பங்கெடுக்க வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]