இன்ஸ்பெக்டர் காமராஜரின் வெறிசெயலால் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணிபெண் உஷா…….

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்தவர் ராஜா. தனியார் வங்கியில் வராகடனை வசூலிக்கும் ஏஜெண்டாக வேலை செய்கிறார்.

இவரது மனைவி உஷா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இந்த நிலையில் உஷா கர்ப்பம் அடைந்தார்.

கணவன், மனைவி இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் திருச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது மனைவியுடன் சென்ற ராஜா, ஹெல்மெட் அணியாமல் சென்றார். பொலிசார் வாகனத்தை நிறுத்த சொல்லியும், அவர் நிறுத்தாமல் சென்றார். இதில் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ், பெரிய குற்றவாளியை விரட்டிச் சென்று பிடிப்பது போல, ராஜாவின் மோட்டார் சைக்கிளை விரட்டிக் கொண்டு ஜீப்பில் சென்றார்.

ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்தார். இதில் நிலைத்தடுமாறி ராஜா, மனைவி உஷாவுடன் சாலையில் விழுந்தார். படுகாயமடைந்த கர்ப்பிணி உஷா சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்தார். ராஜா படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், பொலிசாருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து பொலிஸ் படை விரைந்து வந்து அவர்களை தடியடி நடத்தி கலைத்தது.

இந்த கொடூர சம்பவம் குறித்து சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமியும், அசுவத்தாமன் என்ற வக்கீலும் முறையிட்டனர்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு ஆஜராகி இவர்கள், கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. இந்த சம்பவம் எதிர்காலத்தில் நடக்காத வண்ணம், இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர்.

அதற்கு நீதிபதி, ‘போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜின் செயல் மிகவும் கொடூரமானது. இது ஒரு தீவிர குற்றச்செயலாகும்’ என்று கருத்து தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. எனவே, இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய முடியாது. வேண்டுமென்றால் மனு தாக்கல் செய்யுங்கள். வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]