இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு – தொடருந்து தொழிற்சங்கம்

தீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
வேதன பிரச்சினையை முன்னிறுத்தி நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் தொடருந்து தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தது.
இந்த பணிப்புறக்கணிப்பில் தொடருந்து இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர இந்த போராட்டத்திற்கு தொடருந்து கண்காணிப்பு முகாமைத்துவக்கு உட்பட்ட 5 தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியுள்ளன.
எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவளிக்காத சேவையாளர்களை ஈடுபடுத்தி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து கண்டி, சிலாபம், ரம்புக்கனை, காலி, அவிசாவளை மற்றும் மஹவ ஆகிய பகுதிகளுக்கு 8 தொடருந்து சேவைகள் இடம்பெற்றன.
இந்த தொடருந்துக்கள் இன்று காலை மீண்டும் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் நோக்கி பயணிக்கவுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அதிகாரிகள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக பல்வேறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதன் காரணமாக தற்போது போக்குவரத்தில் ஈடுபடும் 8 தொடருந்து போக்குவரத்தையும் நிறுத்த நேரிடும் என இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]