இன்று நாடாளுமன்றத்தில் ‘லிப்ட்டில்’ சிக்கித் தவித்த மஹிந்த அணி எம்.பிக்கள்

விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி உள்ளிட்ட பல எம்.பிக்கள் நாடாளுமன்ற லிப்ட்டில் (மின்தூக்கி) சுமார் 20 நிமிடங்கள் இன்று (07) சிக்கிக் கொண்டனர்.

அது குறித்து சபையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய தினேஷ் எம்.பி., “லிப்ட் ஒன்றை ஒழுங்காகச் செய்ய முடியாத நாடாளுமன்றமாக இது மாறிவிட்டதா?” எனக் கேள்வியெழுப்பினார்.

உயிர்களை எடுக்கும் சதியாக இது இருக்கலாம் என்பதால் சபாநாயகர் இதனூடாக செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அப்போது பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “நேரம் வந்தால் போக வேண்டி வரும்” என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

இங்கு பேசிய விமல் வீரவன்ச எம்.பி., “ஜனாதிபதி வேட்பாளராக வரப்போவதாக சொல்லப்படும் சபாநாயகர் இதில் கவனமாகச் செல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கருத்து வெளியிடும்போது, இது பாரதூரமான பிரச்சினை என்றும், இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் இந்த லிப்ட்டில் சிக்கியது பெரும் ஆபத்து என்று பந்துல குணவர்தன எம்.பி. குறிப்பிட்டார்.

சந்திரசிறி கஜதீர, ரவி கருணாநாயக்க, சந்திம வீரக்கொடி , தயாசிறி ஜயசேகர , சரத் பொன்சேகா, ரஞ்சித் சொய்சா, நளின் பண்டார, முஜிபுர் ரஹ்மான், ஆசு மாரசிங்க ஆகியோரும் இந்த விடயம் குறித்து பிரஸ்தாபித்தனர்.

இது குறித்து உடனடிக் கவனம் செலுத்தப்படும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.

“பொது எதிரணி உறுப்பினர்கள் பாவம் செய்வதாலேயே இப்படியெல்லாம் ஏற்படுகின்றன” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]