இன்று சபையில் இடம்பெற்ற சுவாரஸ்யமான விவாதம்

நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட அறிக்கையை இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரால் மீண்டுமொருவர் வாசிக்க முடியுமா என்பது தொடர்பில் சபையில் சுவாரஸ்யமான விவாதம் ஒன்று இன்று இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றபோது  விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜோன் அமரதுங்க வரவு செலவுத்திட்ட அறிக்கையில் உள்ள பல விடயங்களை மீண்டும் வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தார். அப்போது ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய பிரதான எதிர்க்கட்சி எம்.பி.யான விமல் வீரவன்ச :- “சபாநாயகர் அவர்களே, நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட அறிக்கையை மீண்டுமொருவர் இச் சபையில் வாசிக்க முடியுமா” எனக்கேள்வி எழுப்பினார். இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் சிரித்தனர்.

இதன்போது அமைச்சர் ஜோன் அமரதுங்க “வரவு செலவுத்திட்ட அறிக்கையை நான் மீண்டும் வாசிக்கவில்லை.அதில் உள்ள முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டுகின்றேன். ஒரு விடயத்தை அடிக்கடி கூறினால்தான் மக்கள் அவ்விடயத்தை புரிந்து,தெரிந்து கொள்வார்கள் ” என விமல் வீரவன் எம்.பியின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது மீண்டும் எழுந்த விமல் வீரவன்ச எம்.பி, இல்லை,இல்லை, நீங்கள் இன்று விவாதத்தில் பேசுவதற்கு தயாரான நிலையில் வரவில்லை. அதனால் எதைப்பற்றிப் பேசுவதென்பது தெரியாமல் ,நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட வரவு,செலவுத்திட்ட அறிக்கையை மீண்டும் படித்து நிலைமையை சமாளிக்கின்றீர்கள் என்கிறார்.இதனால் மீண்டும் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது. அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் சிரித்தவாறே தனது வாசிப்பை தொடர்ந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]