இனவாதத்தை அடியோடு ஒட்ட நறுக்கி, ஒற்றுமையுடன் வாழவேண்டும் – மனோ

மனோ கணேசன்

இனவாதம் என்ற அரக்கனை நாட்டிலிருந்து அகற்றி விட்டு அனைவரும் இலங்கையர் என்ற சமத்துவத்தை மனதில் வைத்து எல்லா இனத்தவரும் செயற்படவேண்டும் அதுவே உண்மையான சகவாழ்வு என என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய சித்திரைப்புத்தாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையர் எம் அடையாளம் பன்மைத்துவம் எமது சக்தி என்ற கருப்பொருளில் தேசிய சித்திரைப்புத்தாண்டு விழா நேற்று யாழ் கனகரட்ணம் மகாவித்யாலயத்தில் இடம்பெற்றது.

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டுடன் யாழ் மாவட்ட செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்போது தமிழ் மற்றும் சிங்கள பாராம்பரிய கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் அமைச்சர் மனோகணேசனால் பாடசாலை மாணவர்களிற்கான புத்தாண்டு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

வடமாகாண பதில் முதலமைச்சரும் மாகாண கல்வி அமைச்சருமான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் தேசப்பிரிய அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர் சாந்திய நாணயக்கார யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதசாயகன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.