இனம்-மதம்-மொழி-பிரதேச வேறுபாடுகள் கடந்து நாம் அனைவரும் பெண்களாக ஒன்றிணைவது அவசியம்! – அனந்தி சசிதரன்

அனந்தி சசிதரன்

இனம்-மதம்-மொழி-பிரதேச வேறுபாடுகள் கடந்து நாம் அனைவரும் பெண்களாக ஒன்றிணைவது அவசியம்!; இலங்கை பெண்கள் பணியகத்தினருடனான சந்திப்பில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் வலியுறுத்தல்!

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு இனம், மதம், மொழி, பிரதேச வேறுபாடுகள் கடந்து நாம் அனைவரும் பெண்களாக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என, இலங்கை பெண்கள் பணியகத்தினருடனான சந்திப்பில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் கீழான செயற்பாடுகளை ஆக்கபூர்வமான வழிமுறைகளில் முன்னெடுத்து செல்வதற்கு ஏதுவாக மத்திய மகளிர் விவகார அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் இலங்கை பெண்கள் பணியகத்தினருடனான சந்திப்பு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தலைமையில் வியாழன்(15.02.2018) அன்று நடைபெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் உள்ள பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ அதனடிப்படையில் உதவிகள் மற்றும் திட்டங்களை வரையறுக்கவோ முடியாது.

அனந்தி சசிதரன்

இலங்கை அரசு முன்னெடுத்து வந்திருந்த கொடும் போர் நடைபெற்ற காலத்திலும் அதன் பின்னரும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ்ப் பெண்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். போரினால் ஏற்பட்ட உளவியல் தாக்கம், சமூக பாதுகாப்பு, பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சினை என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.

எங்களுடைய கட்டமைப்பினூடாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை காண்பற்கோ நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கவோ முடியாத நிலை காணப்படுகின்றது. மத்திய அரசிடம்தான் அதற்கான வாய்புகள் மற்றும் வளங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இருந்தும் மத்திய அரசு முழுமையான கரிசனையுடன் இவ்விடயத்தில் கவனம் செலுத்தவில்லை.

வன்முறைகள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பெண்கள் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீதி கேட்பதில் கூட பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. போரால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன்.

வட கிழக்கில் உள்ள தமிழ்ப் பெண்களில் விதவைகளாக்கப்பட்டுள்ளவர்கள், இயற்கை மரணத்தினாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு ஏற்பட்ட மரணங்களினாலோ அவ்வாறு ஆனவர்கள் கிடையாது. இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த போரின் விளைவாகவே இப் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உருவாகியுள்ளன. ஆகவே இவ்விடயத்தில் விசேட கவனமெடுத்து தீர்வு காணவேண்டிய பொறுப்பும் கடமையும் அதற்கு காரணமான மத்திய அரசாங்கத்திற்கே உள்ளது.

அனந்தி சசிதரன்

பெண் தலைமைத்துவ குடும்பத்தை தலைமைதாங்கும் தாயின் வறுமை அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன் அவர்களின் பிள்ளைகளது எதிர்காலத்தையும் பெரிதும் பாதிக்கின்ற விடயமாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே இந்த நிலையை வெற்றி கொள்ள முடியும். நிதி உதவி ஒருப்புறமிருந்தாலும் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பும் மத்திய அரசு தரப்பில் இருந்து சரிவரக் கிடைப்பதில்லை. இந்த சந்திப்பின் ஊடாக அதனை நிவர்த்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன்.

இவ்வாறு பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு இனம், மதம், மொழி, பிரதேச வேறுபாடுகள் கடந்து நாம் அனைவரும் பெண்களாக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். அந்த அடிப்படையில்தான் இனம், மதம், மொழி, நாடு கடந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தான பங்குபற்றல்களை செய்து வருகின்றேன் என அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகள் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் தொடர்ந்து ஆக்கபூர்வமான வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும், நல்லெண்ண அடிப்படையில் வருகைதந்திருந்த இலங்கை பெண்கள் பணியக உதவி பணிப்பாளர் சீதா கருணாரட்னே அவர்கள் தெரிவித்திருந்தார்.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை பெண்கள் பணியகத்தின் உதவி பணிப்பாளர் சீதா கருணாரட்னே அவர்கள் தலைமையில் வட மாகாணத்தில் பணியாற்றிவரும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தார்கள். இச்சந்திப்பில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவி செயலாளர் அவர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனந்தி சசிதரன் அனந்தி சசிதரன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]