இந்த அறிகுறிகள் இருந்தால் இரட்டை குழந்தைக்கு அதிக வாய்ப்பு!

குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதிரும் இரட்டைக் குழந்தையென்றால் அதீத கவனம் தேவை. இரண்டு குழந்தைகளுக்குமான உணவு, நீர், சுவாசம் என அத்தனையையும் தாய் நிறைவேற்ற வேண்டும்.

அதனால் நேரத்துக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் சிகிச்சை முறைகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரட்டை குழந்தைகளை சுமர்ப்பவர்களுக்கு அதிக அளவில் வாந்தியும் குமட்டலும் வந்து அலைக்கழிக்கும். அதிகாலையில் தூங்கி எழும் முன்பே இந்த தொல்லை ஆரம்பித்துவிடும்.

வாய்க்கு ருசியாக சாப்பிட ஆசையிருந்தாலும் வாந்தியால் சாப்பிடவே வேண்டாம் என்பது போல் ஆகிவிடும். வாந்தி என்பது கர்ப்ப காலத்தில் சகஜமாகக் காணப்படுகிற ஒன்று தான் என்றாலும், இரட்டைக் கருவை சுமப்பவர்களுக்கு அந்த உணர்வு மற்றவர்களை விட மிக அதிகமாகவே இருக்கும்.

அந்த வாசனைகளை சகித்துக் கொள்ள முடியாததால் விருப்பமான உணவுகளைப் பார்த்தால் விலகி ஓடிவிட வேண்டும் போல் தோன்றும். கர்ப்பம் உறுதியாகிற வரை மிகவும் பிடித்திருந்த உணவின் வாசனை, கர்ப்பம் தரித்த பிறகு மிக மோசமான வாசனையாகத் தோன்றும்.

இந்த லிஸ்ட்டில் காபி, டீக்கு முதலிடம். இரட்டைக் கரு உருவாகியிருந்தால் கர்ப்பத்தின் ஆரம்ப நாள்களிலேயே கர்ப்பிணிகளின் எடையில் கூட ஆரம்பித்துவிடும்.

அப்படி அதிகரிக்கிற எடை என்பது வெறும் குழந்தைகளின் எடை மட்டுமின்றி, உடலில் சேருகிற அதிகப்படியான திசுக்கள், திரவம் மற்றும் ரத்தம் ஆகியவற்றையும் சேர்த்தது தான்.

வழக்கமாக கர்ப்பிணிகளுக்கு நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு தெரிய ஆரம்பிக்கிற வயிறு, இரட்டைக் கர்ப்பம் சுமப்பவர்களுக்கு இன்னும் சீக்கிரமே தெரியும்.

அடுத்தடுத்த மாதங்களிலும் வயிற்றின் அளவு பெரிதாகிக் கொண்டே போகும். உள்ளாடை அணிய முடியாத அளவுக்கு மார்பகங்கள் மிகவும் மென்மையாகும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்ப காலத்தில் சகஜம். ஆனாலும் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் போது, அந்த உணர்வு இன்னும் தீவிரமாகும்.

அளவுக்கு மிஞ்சிய களைப்பு உண்டாகும். ஒவ்வொரு நாளையும் கடத்துவதென்பதே போராட்டமாகத் தெரியும். பிரசவ ஹார்மோன் என்று சொல்லக்கூடிய Chorionic Gonadotropin Hormone அளவு மிக அதிகமாக இருக்கும்.

இது கர்ப்பத்தை உறுதிப்படுத்துகிற முதல் சிறுநீர் சோதனையிலேயே தெரியும். கர்ப்பப்பை விரிவடைவதன் விளைவாக, இரட்டைக்கரு உருவான பெண்களுக்கு கர்ப்பப்பையில் தசைப்பிடிப்பு மாதிரியான உணர்வு உண்டாகும்.

இதயத்துடிப்பில் வேகம் தெரியும். சாதாரண நிலையில் 70 முதல் 80 வரை இருக்கும் இதயத்துடிப்பானது, இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு 95 முதல் 105 வரை கூட எகிறும்.

காரணமே இல்லாமல் திடீரென அழுகை, தடுமாற்ற மனநிலை போன்றவையும் உண்டாகும் வாய்ப்பு உண்டு. ஒரு குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு அளவோடு இருக்கும் இந்த உணர்வுகள், இரட்டைக் குழந்தைகளை சுமப்பவர்களுக்கு அளவுக்கு அதிகமாகவே தென்படும்.

குழந்தைகளின் அசைவைக் கூட சீக்கிரமே உணர்வார்கள் இரட்டைக் கருவைச் சுமக்கும் பெண்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]