இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் இடிந்து விழுந்ததினாலேயே 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜகார்த்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் நேற்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெலண்டிங் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாக பதிவானது.

அதன்பின்னர் லோம்பாக் தீவில் நேற்று மாலை 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கடல் சீற்றத்துடன் காணப்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் லோம்போக் தீவில் 2 பேரும், அருகில் உள்ள சாம்பவா தீவில் 3 பேரும் என மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக் கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த பீதியில் இருந்து மீள்வதற்குள், இந்தோனேசியாவில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சதிற்கு உள்ளாகியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]