இந்தோனேசியாவில் சுனாமி கோரதாண்டவம்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியின் கோரத்தாண்டவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது.

பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. சுமார் 65 அடி உயரத்தில் (20 மீட்டர்) சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. சாலைகள், ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

சுனாமி தாக்குதலில் முதல் கட்டமாக 43 பேர் பலியானதாக தகவல் வெளியானது. சுனாமியின் வேகம் குறைந்து தண்ணீர் வடியத் தொடங்கியதும் மீட்பு பணியை தொடங்கியபோது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று மாலை நிலவரப்படி சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 என்ற நிலையில் இருந்தது. இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 281 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]