இந்திய வம்சாவளி மக்களின் அபிலாசைகளுக்கு தார்மீக ஆதரவை மோடியிடம் கோருவோம் : இ.தொ.கா.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இரண்டு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளையும் தாண்டி உணர்வு பூர்வமான பிணைப்பினை கொண்டது. என்பதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அயல் நாட்டு பிரதமராக மட்டும் நோக்காமல் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களில் அக்கறையுள்ள பங்காளியாகவே பார்க்கிறோம் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த இருநூறு வருடங்களில் தொடர்ச்சியாக இந்தியா இலங்கையில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களின் மீது மிகுந்த கரிசணை செலுத்தி வந்திருக்கின்றது. பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு, மற்றும் கல்வி உறவுகள் தொடர்ந்தவண்ணமுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர்கள் இந்திய தலைவர்களை சந்தித்து எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றும்படி கோரிக்கை விடுத்த போதெல்லாம் அதை சாதகமாக பரிசீலனை செய்ததன் விளைவாகவே இன்று எமக்கு கிளங்கன் வைத்தியசாலை கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த விடயத்தை எமது ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானுடன் இணைந்து அப்போதய இந்திய உயர் ஸ்தானிகராகவிருந்த கோபாலகிருஸ்ண காந்தி முன்னின்று செயற்பட்டதை நன்றியுடன் நினைவு கூறவேண்டும். அதேபோல ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையை ஏற்று நான்காயிரம் வீடுகளை இந்தியா எமக்கு தந்துள்ளது. இருப்பினும் இந்திய வம்சாவளி மக்களின் இன்னும் பல சமூக தேவைகளுக்கு இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.

இலங்கையில் தற்போது அரசியல் யாப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. ஒரு சமூகத்தின் இருப்பு அந்த சமூகத்தின் அரசியல் பிரதிநிதிதுவத்தினாலேயே பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது. இலங்கையின் பல பிரதேசங்களிலும் பரந்து வாழுகின்ற இந்திய வம்சாவளியினரின் இன வீதாசாரத்திற்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவின் அழுத்தம் இன்றியமையாதது.

அதேபோல இலங்கையில் எமது கலாசார விழுமியங்களை ஏனைய சமூகங்களின் கலாசாரங்கள் விழுங்கிவிடாமல் பாதுகாப்பதற்கும் இந்தியா உதவிக்கரம் நீட்ட வேண்டும். அத்துடன் மலையகத்தில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களில் பெரும்பாண்மையோர் இந்துக்களாக இருப்பதால் அவர்களின் மத பாரம்பரியங்களை பேணுவதற்கு இந்தியாவின் விசேட பங்களிப்பு நல்க வேண்டும் என்பதும் எமது பிரதான எதிர்பார்பபுக்களாகும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]