இந்திய மீனவர்கள் 77 பேர் விடுதலை…

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்களும், நேற்று (28) விடுதலை செய்யப்பட்டனர்.

எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி, ராமநாதபுரம், புதுக் கோட்டை, நாகப்பட்டினம், காரைக் கால் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 92 மீனவர்களை, கடற்படையினர் கைது செய்திருந்தனர்.  கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை கைது செய்யப்பட்ட இவர்கள், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேசுவரம், புதுக் கோட்டை, நாகை, காரைக்கால் ஆகிய மாவட்ட மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர், இது குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களையும் எழுதியிருந்தனர்.

இந்திய மீனவர்கள்

இதைத் தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், மீனவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரைக் கடிதத்தை, இலங்கை சட்டத்துறை அமைச்சு, கடந்த 25ஆம் திகதி வழங்கியிருந்தது. எனினும், படகுகளை விடுவிக்க, இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஊர்க்காவல் துறை, பருத்தித் துறை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய நீதிமன்றங்களில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட 77 77 தமிழக மீனவர்களும், விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பின்னர், மீனவர்கள் அனைவரும், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் 77 பேரும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தமிழ்நாட்டைச் சென்றடைவர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]