இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி இலங்கைக்கு விஜயம்

இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ், இலங்கைக்கு நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் உயர் அதிகாரிகள் குழுவொன்றும் கொழும்பு வந்துள்ளது.

தென்பிராந்திய தலைமையக நடவடிக்கை தளபதி மேஜர் ஜெனரல் வி.கே.சிங், லெப். ஜெனரல் ஹரிசின் இராணுவ செயலர் கேணல் கேளசல் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் நேற்றுக்காலை இலங்கை இராணுவத் தலைமையகத்துக்குச் சென்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கும் இடையிலான பயிற்சி ஒத்துழைப்புகளை அதிகரிப்பது குறித்து இந்தப் பேச்சுக்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை இராணுவம் அண்மைய ஆண்டுகளில் நல்ல அனுபவங்களைப் பெற்றிருப்பதாகவும்,இலங்கையின் கொமாண்டோக்கள், சிறப்புப்படையினரிடமும் பயிற்சி மையங்களிலும் கூடுதலான இந்திய இராணுவ அதிகாரிகளை அனுப்பி பயிற்றுவிக்க விரும்புவதாகவும் ஜெனரல் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் இயந்திர காலாட்படைப்பிரிவை உருவாக்கிய போது, இந்திய இராணுவத்தின் இயந்திர காலாட்படைப்பிரிவு வழங்கிய உதவிகளை சிறிலங்கா இராணுவத் தளபதி இதன் போது, நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய இராணுவ அதிகாரிகள் குழு, இலங்கை பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், முப்படைகளின் தளபதிகள், கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி, யாழ். படைகளின் தளபதி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி ஜெனரல் ஹரிஸ் நாளை யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இராச வீதி , கல்வியங்காடு பகுதியில், விடுதலைப் புலிகளுடனான சண்டையில் உயிரிழந்த இந்தியப் படையினர் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தை சிறிலங்கா படையினர் துப்புரவு செய்து வருகின்றனர்.

இங்கு லெப்.ஜெனரல் ஹரிஸ் அஞ்சலி செலுத்தவுள்ளார் என்று தெரியவருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]