இந்தியா தவறான புரிந்துணர்வை கொண்டிருந்தது

“இலங்கையில் துறைமுகங்களை அமைக்க, நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க இந்தியா ஆர்வம் காட்டவில்லை” என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பிய மஹிந்த பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் நேற்று இதகை் கூறியுள்ளார்.

“துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை முதலில் நாங்கள் இந்தியாவுக்கே வழங்கினோம். ஆனால், ஹம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைக்க இந்தியா ஆர்வமாக இருக்கவில்லை.

அதனையடுத்துதான் நாங்கள் சீனாவிடம் சென்றோம். இதனைப் பற்றிக் கூறினோம். அந்தத் திட்டத்தை அவர்கள் உடனடியாகவே ஏற்றுக் கொண்டார்கள். அது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அது ஒரு வணிக பரிமாற்றம் மட்டுமேயாகும்.

எமக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முக்கியத்துவம் தெரியும். அதனை வழங்கிய போது, நாட்டுக்குப் பின்னர் மற்றதைப் பார்ப்பதே, ஒரு தலைவராக எனது பிரதான கடமையாக இருந்தது.

துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் எல்லாவற்றையும் விற்றுவிட்டது. எமது கொள்கை தனியார் மயமாக்கலுக்கு எதிரானதாக இருந்தது. தற்போதைய அரசாங்கம், 99 ஆண்டுகள் குத்தகைக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று விட்டது.

இந்தியா கடந்த காலங்களில் எம்மைப் பற்றி தவறான புரிதல்களைக் கொண்டிருந்தது. இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை சிறந்ததாக இருந்த அதேவேளை, சில விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது” என்றார்.