இந்தியாவுடனான நெருக்கம் தொடர்பில் சி.வி விளக்கம்

“இந்தியாவுடன் நாங்கள் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவது யதார்த்த பூர்வமானது. அதற்கு உள்ளர்த்தங்கள் கற்பிக்கப்படுவது நகைப்பிற்குரியது” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்தியத் துணைத் தூதுவர் நடராஜனுக்கு வடக்கு மாகாணசபையின் சார்பில் நேற்று நடத்தப்பட்ட பிரிவுபசார நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“கடந்த மாதம் 25ஆம் திகதி இந்திய துணை தூதுவர் எ.நட்ராஜனின் பிரிவுபசார நிகழ்வில் யாழ். மக்கள் சார்பாக வாள் ஒன்றை ஞாபகார்த்தப் பரிசாக வழங்கியிருந்தமைக்கு வேறுபட்ட விதமாக அர்த்தம் வழங்கப்பட்டுள்ளது.

“கம்பர் உரை எழுதாமையால் தமிழறிஞர்கள் எவ்வாறு தமது திறமைகளைத் தாம் எழுதிய உரைகளின் வாயிலாக வெளிப்படுத்தினார்களோ, அதேபோன்று எமது ஊடகவியலாளர்களும் 25ஆம் திகதி தொடக்கம் இன்று வரை விதம்விதமான கற்பனை வளத்துடன் அன்று கையளித்த வாளுக்கான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

“அது மட்டுமல்லாது எனது அரசியற் போக்கு இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதாகவும் அதில் அரசியல் ரீதியான உள்ளர்த்தங்கள் இருப்பதாகவும் கூறி வருகின்றார்கள்.

“உதாரணமாக, வடக்கு, கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதில் இந்தியாவின் முக்கியத்துவம் பற்றியும் இந்தியாவுக்கு இருக்கின்ற தார்மீகக் கடமை பற்றியும் நான் வலியுறுத்தி வருவதை, நான் இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதாக சில பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“நாங்கள் எமது அண்டை நாடான இந்திய வல்லரசுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவது யதார்த்த பூர்வமானது. அதற்கு உள்ளர்த்தங்கள் கற்பிக்கப்படுவது நகைப்பிற்குரியது” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]