இந்தியப் படகுகளை விடுவிப்பதற்கு மோடியின் வருகை காரணம் அல்ல

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களது படகுகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விடுவிக்குமாறு எந்தத் தரப்பும் வேண்டுகோள் விடுக்கவில்லை என்று  மீன்பிடித்துறை அமைச்சர்  மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இந்தியப் படகுகளை

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது படகுகளுடன் அவர்கள் கைதுசெய்யப்படுவது என்பது வழமையான ஒன்றாகும். இவ்வாறு கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆட்சியில் இந்திய அரசின் அழுத்தங்கள் காரணமாக படகுகள் விடுவிக்கப்பட்டன. எனினும், அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை அதிகரித்தமையால் இந்திய மீனவர்களது படகுகள் விடுவிப்பதில்லை என்ற இறுக்கமான கொள்கையில் இந்த அரசு உள்ளது. இந்திய அரசு மற்றும் இந்திய மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும் நாங்கள் படகுகளை விடுவிக்கவில்லை.

படகுகளை

தற்போது, கைப்பற்றப்பட்ட படகுகள் சேதமடையும் நிலையில் உள்ளதுடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இடையூறாகவும் அமைந்துள்ளன. எனவே, குறித்த படகுகளை அகற்றுமாறு இலங்கை மீனவர்களும், கடற்படையினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கமைய, தடுத்து வைக்கப்பட்டுள்ள சேதமடைந்த நிலையில் உள்ள படகுகளை விடுவிக்கத் தீர்மானித்துள்ளோம். எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக இதனை விடுவிக்கவில்லை. அவ்வாறு விடுவிக்குமாறு எந்தத் தரப்பும் கோரவும் இல்லை.

இது குறித்து இந்தியாவுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். சேதமடைந்த படகுகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. எனினும், மோடியின் விஜயத்தை முன்னிட்டு படகுகளை விடுவிக்கவில்லை. வடக்கு மீனவர்களது விருப்புக்கு அமையவே சேதமடைந்த படகுகள் விடுவிக்கப்படும்” – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]