இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்விடோலினா, ஸ்வெரேவ் சாம்பியன்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 4ஆம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), தரவரிசையில் 11ஆவது இடம் வகிக்கும் எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பறிகொடுத்த ஸ்விடோலினா, அடுத்த இரு செட்டுகளில் எழுச்சி பெற்று ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்தார்.

முடிவில் ஸ்விடோலினா 46, 75, 61 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கினார். இந்த ஆண்டில் அவர் வென்ற 4ஆவது பட்டம் இதுவாகும். இதன் மூலம் வெளியாகவுள்ள புதிய தரவரிசையில் அவர் டாப்10 இடத்திற்குள் நுழைகிறார். வலது கணுக்காலில் காயத்தால் அவதிப்பட்ட ஹாலெப் 2ஆவது செட்டின் போது சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆடியது குறிப்பிடத்தக்கது.

இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) யங் ஜான் சான் (சீனத்தைபே) ஜோடி 75, 76(4) என்ற நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் ரஷியாவின் மகரோவா எலினா வெஸ்னினா இணையை தோற்கடித்து பட்டத்தை வென்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த அரைஇறுதியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம்மை நேர் செட்டில் பந்தாடிய 4 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச்(செர்பியா), இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் இளம் புயல் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொண்டார்.

இதில் அதிரடியான ஷாட்டுகளால் ஜோகோவிச்சை மிரள வைத்த 20 வயதான ஸ்வெரேவ் 64, 63 என்ற நேர் செட்டில் வெற்றிக்கனியை பறித்தார். இந்த போட்டி ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியாகும். இத்தகைய போட்டியில் அவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]