இது 18 + பெண்களுக்கான பதிவு… வேறயாரும் படிக்காதிங்க…!

பெண்களும் அடல்ட்ஸ் தான், எல்லா கெட்ட வார்த்தையும் பெண்களை சார்ந்தே இருப்பது ஏன்?, ஆண் ஆதிக்க உலகம் பெண்களை எப்படி எல்லாம் மாற்றியுள்ளது என பலவற்றை குறித்து நாம் இன்றும் முழுமையான விவாதங்கள் நடத்தவில்லையோ, அதற்கான தீர்வு வரவில்லையோ என பல கேள்விகள் எழுந்திருக்கிறது.

18+ 18 வயதை கடந்துவிட்டால் அனைவரும் அடல்ட்ஸ் தான். ஆனால், நமது சமூகத்தில் 18 வயதை கடந்த ஆண்களை மட்டுமே அடல்ட்ஸாக காண்கிறோமே தவிர, பெண்களை அல்ல. ஒரு படம் A சர்டிபிகேட் வாங்கிவிட்டால் பெண்கள் வர மாட்டார்கள் என்ற எண்ணம் நிலவுகிறது. ஏன், 18 வயதிற்கு மீறிய பெண்களுக்கு அதை பற்றி எதுவும் தெரியாதா? பெண்களுக்கும் எல்லாமும் தெரியும்.

18 வயதை கடக்கும் முன்னரே ஓர் ஆண் சமூகத்தில் செக்ஸ் பற்றி தாராளமாக பேசலாம். கெட்ட வார்த்தை பிரயோகத்துடன். ஆனால், குழந்தையே பெற்றாலும் கூட ஒரு பெண் செக்ஸ் பற்றிய தனது கருத்துக்களை சமூகத்தில் பதிவு செய்ய முடியாத நிலை தான் இங்கே இருக்கிறது.

நம் மொழியில் மட்டுமல்ல, உலக மொழிகளில் அனைத்திலும் கெட்ட வார்த்தைகள் பெண்களை குறிப்பதாக தான் ஒருக்கிறது. பெண்களை திட்ட ஆண்களுக்கு கெட்ட வார்த்தை இருக்கிறது. ஆனால், ஆண்களை திட்ட பெண்களுக்கு கெட்ட வார்த்தை இருக்கிறதா? இப்படி ஒரு விஷயத்தை பற்றி நம்மில் பலர் யோசித்தது கூட இல்லை என்பது நிதர்சனம்.

தம்மு, குடி, பார்ன், கெட்ட வார்த்தை என எல்லாமே தவறு தான். ஆனால், அதை ஆண்கள் செய்தால் ஒரு மாதிரியும், பெண்கள் செய்தால் வேறு மாதிரியும் பார்ப்பது என்ன விதமான சமூக சட்டங்கள் என தெரியவில்லை. தரமணி-க்கு A சர்டிபிகேட் வழங்க இதுவும் காரணமாக இருந்துள்ளது. தவறுகளில் என்ன பாரபட்சம் ஆண்கள் செய்தாலும், பெண்களும் செய்தாலும் கொலை எப்படி கொலையோ. அப்படி தான் புகை, குடி, பார்ன், கெட்ட வார்த்தை எல்லாம்.

பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன், தெரு முனையில் ஏதனும் ஒரு பொது இடத்தில் ஆண்களை போல பெண்களும் நாலைந்துபேராக குழுவாக நின்று, மச்சி, மாப்பு என குரலை உயர்த்தி உற்சாகமகா பேசினால், நாம் என்ன கூறுவோம்… “அடங்காப்பிடாரி, இதெல்லாம் உருப்படுமா? போற வீடு விளங்குமா?” இதை ஆண்கள் காலம் காலமாக செய்து வருகிறார்களே… அவர்களை இப்படி ஏதேனும் ஒரு வாசகம் கூறி விமர்சித்திருப்போமா? இல்லையே… ஏன்?

சமையற்கட்டில் இருந்து வெளியே வந்து, வெளியூர் சென்று, வெளி மாநிலங்கள் சென்று, வெளிநாடுகள் சென்று எல்லைகள் கடந்து பெண்கள் பலமடங்கு சாதித்து காட்டினாலும். இன்றளவும் பல விஷயங்களில் ஆண்களின் கட்டுப்பாட்டில் தான் பெண்கள் சங்கலி போட்டு கட்டி வைக்கப்படுகிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

கணவனின் பணியிட மாற்றத்திற்காக தன் வேலையை ராஜினாமா செய்த மனைவிகள் தான் ஏராளம். மனைவியின் பணியிட மாற்றத்திற்காக தனது வேலையை ராஜினாமா செய்த ஆண்கள் எத்தனை பேர்? ஒட்டுமொத்த இந்தியாவையும் சேர்த்து விரல் விட்டு எண்ணிவிடலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]