இது பங்குனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும்…

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பார்ப்போம். பங்குனி மாதப் பிறப்பு என்பது சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசப்படுத்தக்கூடிய அளவிற்கு ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆனால், இவர்களின் முகபாவங்களை வைத்து எதையும் தெரிந்து கொள்ள முடியாது.

உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதே நேரத்தில் சீக்கிரமாக மனத் தளர்ச்சி அடைந்து விடுவார்கள். பேச்சில், சிந்தனையில் கனிவும், கண்டிப்பும் இருக்கும். பெருந்தன்மையும், பரந்த நோக்கமும் இருக்கும்.

இடம், பொருள், ஏவல் அறிந்து பணி புரிவதில் வல்லவர்கள். எப்பொழுதும் பல்வேறு விதமான எண்ணங்களில் மூழ்கி இருப்பார்கள். இவர்கள் ஸ்தோத்திரப் பிரியர்கள். இவர்களை புகழ்ந்து பேசினால் எந்த ஒரு சலுகையையும் சுலபமாக பெற்றுவிடலாம்.

அதேபோல் இவர்களுக்கு ஒரு வேலை ஆக வேண்டுமானால் அதை எப்படியாவது சாதித்துக் காட்டுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. சிறு வயதில் கூடா நட்பினால் சில இடையூறுகள் வர வாய்ப்புள்ளது. தீய பழக்க வழக்கங்கள் இவர்களை எளிதில் வந்து பற்றும். இவர்கள் இளம் வயதில் வறுமையில் வாடினாலும் 40 வயதிற்கு மேல் படிப்படியாக முன்னேறி சகல யோகங்களையும் அனுபவிப்பார்கள்.

தனம் குடும்பம் வாக்கு

குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள். வாக்கு கொடுத்து விட்டால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவார்கள். இவர்கள் கையில் யார் பணமாவது புரண்டு கொண்டே இருக்கும். நிலம், கட்டிடங்கள், குத்தகை மூலம் பண வரவு இருக்கும். கொடுக்கல் வாங்கல், வட்டி வரவு என கைகொடுக்கும்.

பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள், அதை இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். சொந்த பந்தங்களிடையே எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி விடுவதால் பலரின் பகைக்கு ஆளாவார்கள். எப்போதும் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்துவதால் இவர்களிடம் சேமிப்பு இருந்து கொண்டே இருக்கும்.

திட தைரிய வீரியம்

தீர்க்கமாகவும், தெளிவாகவும் முடிவு எடுப்பார்கள். பதுங்கிப் பாய்வதை இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். சோதனை காலங்களில் வேதனை அடையமாட்டார்கள். மனக் குழப்பங்களை குடும்பத்தினர் மீது காட்டமாட்டார்கள். காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். அதே நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்கமாட்டார்கள்.

சொத்து சுகம்

விவசாய விளை நிலங்கள், தோட்டம், வீடு, அடுக்குமாடி கட்டிடங்கள், அசையும் சொத்துகள் சேரும் யோகம் உண்டு. மாமன் வகை உறவுகள் மூலம் இவர்களுக்கு உதவியும், சொத்தும் கிடைக்கும். கட்டிடங்களில் இருந்து வாடகை வருமானம் மூலம் பெரும் தனம் சொத்து சேரும். செவ்வாய் சாதகமாக இருக்கும் பட்சத்தில் சகோதர உறவுகளால் நன்மை உண்டு.

சிலருக்கு சகோதர பங்குகள் தானமாக கிடைக்கும். பொதுவாக உடல்நலம் சீராக இருக்கும். இளமையில் சகல சுக போகங்களையும் அனுபவிப்பார்கள். 40 வயதிற்கு மேல் மறதிநோய் வர வாய்ப்புள்ளது. நரம்பு சம்பந்தமான கோளாறுகள் இருக்கும். சந்திரன் சாதகமாக அமையவில்லை என்றால் சைனஸ், தலைபாரம், கண் பார்வை கோளாறு, ஆண்மைக்குறைவு போன்றவற்றால் கஷ்டப்படுவார்கள்.

பூர்வ புண்ணியம் குழந்தைகள்

செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நல்ல யோக அமைப்பில் இருக்கும் பட்சத்தில் கைராசி நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களால் தொடங்கி வைக்கப்படும் நல்ல காரியங்கள் ஒன்றுக்கு பத்தாக பல்கிப் பெருகும். பெண் குழந்தைகள் அதிகம் பிறப்பதற்கு இடமுண்டு. இந்த மாதத்தில் வருகின்ற பெளர்ணமி அன்று பிறப்பவர்கள் பல்கலை வித்தகர்களாக இருப்பார்கள்.

இயல், இசை, நாட்டியம், கலை, இலக்கியம், சாஸ்திர ஆராய்ச்சி, சிற்பக்கலை போன்றவற்றில் தேர்ச்சி அடையும் யோகம் உண்டு. பெண்களால் ஆதாயம் லாபம் அடையும் அமைப்பு உண்டு. வாக்கு பலிதம், மந்திரசித்தி, ஆன்மிகத்தில் மிக நல்ல நிலையை அடைவார்கள். பெண் தெய்வங்களை வழிபடுவதில் மனம் லயிக்கும். தியானம், யோகம், நிஷ்டை போன்றவை கைகூடும். குழந்தைகள் மூலம் பெயரும் புகழும் அடைவார்கள்.

ருணம் ரோகம் சத்ரு

கணக்கு, வழக்குகள் திட்டமிடுதல் போன்றவை இவர்களுக்கு கைவந்த கலையாகும். சுப, அசுப, நோய் போன்ற செலவுகளுக்கு கடன் வாங்கினாலும், அதை உரிய காலத்தில் திரும்ப செலுத்துவதில் குறியாக இருப்பார்கள். திட்டமிட்டு காய் நகர்த்தி எதிர்ப்புகளை சமாளிப்பார்கள் வழக்குகளில் போய் சிக்கிக் கொள்ளாமல் இடம் பொருள் அறிந்து நயமாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.

நண்பர்கள் மூலம் இவர்களுக்கு பிரச்னைகள் இருக்காது. ஆனால், உறவுகள் மூலம் சில சர்ச்சைகள், மனக் கசப்புகள், ஏற்படுவதற்கு இடமுண்டு வெளிப்படையாக சில விஷயங்களைப் பேசுவதுதான் இந்த நிலைக்கு காரணமாகும்.

பயணங்கள், மனைவி, கூட்டாளிகள்

எல்லார் வாழ்க்கையிலும் பயணங்கள் என்பது தவிர்க்க முடியாதது ஆகும். இவர்கள் பயணங்களை மிகவும் விரும்புவார்கள். நண்பர்களுடன் உல்லாசப் பயணங்கள் செல்வது இவர்களுக்கு மிகவும் பிடித்தமானவை.

அதிலும் குறிப்பாக மலை பிரதேசங்கள், இயற்கை அழகு கொஞ்சும் இடங்களில் சென்று தங்குவது இவர்களுக்கு மிகவும் பிடித்தமானவை. விமானப் பயணங்கள் என்பது இவர்களுக்கு மிகவும் விருப்பமாகும். இவர்களுக்கு நல்ல மதியூகமும், ஆற்றலும், ரசனையும் உள்ள வாழ்க்கைத் துணை அமையும்.

பெரும்பாலானவர்களுக்கு திருமணபந்தம் ஏற்பட்டவுடன்தான் முன்னேற்றம் இருக்கும். சுக்கிரன், புதன், சாதகமாக நல்ல அமைப்பில் இருக்கப் பிறந்தவர்கள். மனைவி மூலம், பல யோக, போக, பாக்கியங்களை அனுபவிப்பார்கள். சில கருத்து வேறுபாடுகள், வாக்குவாதம் என்று வரும்போது இவர்கள் பிடிவாதமாக இருந்தாலும், இவர்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அதை சமாளித்து குடும்பத்தை வழி நடத்தக்கூடிய வகையில் மனைவி அமைவார்.

தசமஸ்தானம் தொழில்

தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பார்க்கும்போது இவர்கள் நிர்வாகத் திறமைமிக்கவர்களாக இருப்பார்கள். பல்துறை வித்தகர்களாக வருவதற்கு அமைப்பு உண்டு. கலைத்துறையில் பிரகாசிப்பதற்கான யோகம் உண்டு.

சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞர்களாகவும், நூல் வெளியிடுகின்ற பதிப்பகங்கள் நடத்துபவராகவும் இருப்பார்கள். இலக்கியம், ஆராய்ச்சி, போன்றவற்றில் கால் பதிப்பார்கள். அரசுத் துறையில் முக்கிய நிர்வாகப் பதவிகள் இவர்களுக்கு தேடி வரும். புதன் பலம் உள்ளவர்கள் சிறந்த ஆடிட்டர்களாக வருவதற்கு யோகம் உண்டு.

நிதி, நீதித் துறையிலும் இவர்களுக்கு பணியாற்றும் அம்சம் உண்டு. வியாபாரத்தில் ஹோட்டல் தொழில் கை கொடுக்கும். ஏற்றுமதி, இறக்குமதி, கம்ப்யூட்டர் சம்பந்தமான தொழில், ஜவுளிக் கடை, ரியல் எஸ்டேட், செங்கல் சூளை சிமென்ட், மணல் போன்ற கட்டிட சம்பந்தமான தொழில்கள் இவர்களுக்கு லாபகரமாக இருக்கும். அதன் மூலம் பெரும் புகழும், தனமும் கிடைக்கப்பெறுவார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]