இணையத்தள முடக்கத்தால் இலங்கை பாரிய பின்னடைவை சந்திக்கும்

முகப்புத்தகத்துக்கு புதிய தடை

இணையத்தள முடக்கத்தால் இலங்கை பாரிய பின்னடைவை சந்திக்கும்

இலங்கையில் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டது தொடர்பாக நல்லாட்சி அரசானது விரைவாக தீர்மானங்களை மேற்கொள்ள வேணடும் என அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர்களின் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சுபாசன அபயவிக்ரம தெரிவித்துள்ளார். அவ்வாறு அரசு செய்யாவிடின் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாரிய எதிர்ப்பை அரசாங்கம் சந்திப்பதோடு நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக பின்னடைவினை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்தார்.

மாலபேவில் அமைந்துள்ள அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர் உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இக்கருத்தினை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தள முடக்கத்தினால் சுமார் 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு பிரதான காரணம் இவர்களின் பிரதான தொடர்பாடல் ஊடகங்களாக வைபர், வட்ஸ் அப் மற்றும் முகப்புத்தகம் போன்றன காணப்படுகின்றன.

நாட்டின் தேசிய தேவைகளுக்காக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுப்படுபவர்களின் தொடர்பாடல் உரிமையை கைகொள்வது மற்றும் பாதிப்பை ஏற்படுத்துவது பாரிய குற்றமாகும்.

இந்த சமூக வலைத்தளங்களினூடாகவேஇவர்களது உறவுகள் அனைத்தும் தொடர்புகொள்கின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக இவர்கள் அசௌகரிய நிலையினை சந்தித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களை தவறான முறைகளில் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் தவறு செய்பவர்களை தண்டிப்பதற்கு பதிலாக லட்சக்கணக்கான மக்களின் தேவையை தடைசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடாகும்.

அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் விரைந்து கவனம் செலுத்தாவிட்டால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் தொடர்ச்சியான பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படும். வைபர் வலைத்தளத்தை பயன்படுத்தும் பிரதான ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாக காணப்படுகின்றது.

இலங்கையில் 59 இலட்சம் மக்கள் முகப்பு புத்தகத்தையும், 8 இலட்சம் மக்கள் கீச்சகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ச்சியான இந்த சமூக வலைத்தளங்களின் முடக்கம் தொடருமானால் நாட்டின் பொருளாதாரம் தொடர் பின்னடைவினை எதிர்நோக்க வேண்டிய சூழல் தோற்றம் பெறும் என தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]